அதிமுக தலைமை அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டு கலவரத்தில் முடிந்தது.
அதிமுக அலுவலகத்தின் உள்ளே இருந்த பொருட்களையும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சேதப்படுத்தினர்.
இதனைத் தொடர்ந்து வருவாய்த் துறை அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்குச் சீல் வைத்தனர். நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் அதிமுக அலுவலக சீல் அகற்றப்பட்டு சாவி இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே, கலவரத்தின் போது அலுவலகத்திலிருந்த ஆவணங்கள், கணினிகள், ராயப்பேட்டை, திருச்சி, கோவை புதுச்சேரி அதிமுக அலுவலகத்தின் அசல் பத்திரங்கள், வெண்கல குத்துவிளக்கு, வெள்ளிவேல் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் கலவரத்தில் ஈடுபட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீது ராயப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என். சதிஷ்குமார் வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வந்தனர். கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
விசாரணையின் போது ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திருடப்பட்ட பொருட்கள் மற்றும் ஆவணங்களை பத்திரமாக வைத்திருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், அதிமுக அலுவலகத்தில் திருடப்பட்ட ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பன்னீரின் ஆதரவாளர் கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தியிடம் இருந்து ராயப்பேட்டை தலைமை அலுவலக பத்திரம் உட்பட மொத்தம் 113 ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா