Stipend for Tamilnadu Senior Citizen
தமிழகம் முழுவதும் சமூக பாதுகாப்புத் திட்டங்களில் ஏழு மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், மாற்றுத்திறனாளிகள், முதியோர் சிரமமடைந்து வருகின்றனர்.
வருவாய்த் துறை சார்பில், சமூக பாதுகாப்புத் திட்டங்கள் மூலம் முதியோர், விதவை, முதிர்கன்னிகள், கணவரால் கைவிடப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் மாநிலம் முழுவதும் 30.55 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.
அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை ரூ.1,500 ஆகவும், மற்றவர்களுக்கு ரூ.1,200 ஆகவும் உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால், அந்த மாதத்திலிருந்து இதுவரை ஏழு மாதங்களாக உதவித்தொகையே வழங்கப்படவில்லை. மேலும், புதிதாக விண்ணப்பம் செய்தவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான ஆணை மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. உதவித்தொகை வழங்காததால் அவர்களும் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள சிவகங்கையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சிலர்,
“எங்களுக்கு வாழ்வாதாரமே உதவித்தொகைதான். அதையும் ஏழு மாதங்களாக நிறுத்திவிட்டதால் சிரமப்படுகிறோம். புதிதாக விண்ணப்பித்து ஆணை பெற்ற ஒரு லட்சம் பேரும் உதவித்தொகைக்காக காத்திருக்கின்றனர்” என்றனர்.
உதவித்தொகை வழங்கப்படாததற்கான காரணம் குறித்து பேசியுள்ள வருவாய்த் துறை அதிகாரிகள்,
“இந்தத் திட்டத்தின் நோக்கமே ஆதரவு இல்லாமல், உணவுக்கு வழியில்லாமல் இருப்போருக்கு நிதியுதவி வழங்குவது தான். எனவே, இந்தத் திட்டத்தில் மூலம் பயன் பெறுபவர்களுக்கு சொத்துகள் உள்ளிட்ட வசதிகள் இருந்தால் உதவித்தொகை நிறுத்தப்படுகிறது.
மேலும், சொந்தமாக வீடு இருக்கிறது. இன்னும் சில முதியவர்கள் தங்களது மகன்கள் அல்லது மகள்கள் வீட்டில் வசிக்கின்றனர்.
வசதியோடு இருப்பவர்களும் நிதியுதவி பெறுவது தெரிய வந்திருப்பதால் ஓய்வூதியம் நிறுத்தப்படுகிறது. மேலும் பல மாவட்டங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடக்கின்றன.
இந்த மாதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன், தகுதியானவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும்” என்கின்றனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
”பிரமாண்ட பட்ஜெட்” மீண்டும் சயின்ஸ் பிக்ஷன் படத்தில் நடிக்கும் சூர்யா?
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்!
சிவகார்த்திகேயனால் கைவிடப்பட்ட படம்?
டிஜிட்டல் திண்ணை: இங்கே உதயநிதி… இந்திய அளவில் ஸ்டாலின் திமுகவின் பிரசார பிளான்!