2024 தேர்தல் முடிந்ததும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையை நடத்திக் கொண்டிருக்கிறது. பிப்ரவரி 14, 2024 அன்று நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
நாட்டில் இம்மாதிரியான தாமிர உருக்காலைகள் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சொத்தினை நாடு இழந்துவிடக் கூடாது என்று தலைமை நீதிபதி சொல்லியிருப்பது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு வருவதற்கான ஒரு சிக்னலாக அமைந்திருக்கிறது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டங்கள்
2018-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மிகப்பெரிய தொடர் போராட்டங்கள் தூத்துக்குடியில் நடைபெற்றன. ஸ்டெர்லைட் ஆலையினால் பல்வேறு நோய்களுக்கு உள்ளாவதாக குமரெட்டியாபுரம் பகுதியைச் சேர்ந்த மக்கள் 100 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். மே 22, 2018 அன்று நடைபெற்ற பேரணியில் காவல்துறையால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 13 பேர் கொல்லப்பட்டனர். ஸ்நோலின் என்ற 17 வயது சிறுமி வாயிலேயே சுடப்பட்டு உயிரிழந்தார். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுதும் எழுந்த கடும் எதிர்ப்புணர்வால், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதாக அறிவித்து தமிழ்நாடு அரசு ஆலையை மூடுவதற்கு உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றமும் தமிழ்நாடு அரசின் ஆணையை உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத்தில் வேதாந்தா
இந்நிலையில் 6 ஆண்டுகள் இப்போராட்டமானது பல்வேறு கட்டங்களை கடந்த நிலையில், தற்போது உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த வழக்கு நடந்தபோது, வேதாந்தா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஷ்யாம் திவான் பின்வரும் வாதங்களை முன்வைத்தார்.
இந்தியாவின் மொத்த காப்பர் உற்பத்தில 36% சதவீதத்தை ஸ்டெர்லைட் நிறுவனம்தான் தயாரித்துக் கொண்டிருந்தது. ஒவ்வொரு நாளும் 1700 டன் காப்பர் உற்பத்தி ஸ்டெர்லைட் ஆலையில் நடந்து கொண்டிருந்தது. இவை அனைத்தும் தற்போது நின்றிருக்கிறது.
இதன் காரணமாக இந்தியா காப்பர் தேவைக்கு இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. மேலும் உரத்திற்கான இறக்குமதியும் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அதிகரித்திருக்கிறது. தூத்துக்குடி சிப்காட் என்பது 1800 ஏக்கர் கொண்ட பகுதி. அங்கு 27 நிறுவனங்கள் ரெட் கேட்டகிரியில் இருக்கிறது. ஆனால் அதில் எந்த நிறுவனத்தின் மீதும் நடவடிக்கை எடுக்காமல் ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கிறார்கள். இது உள்நோக்கம் கொண்டதாகும்” என்று ஸ்டெர்லைட் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் ஆகியோர் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக் கூடாது என வாதிட்டனர்.
நிபுணர் குழுவை உருவாக்கச் சொல்லும் சந்திரசூட்
வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் ஸ்டெர்லைட் ஆலை திறப்பது தொடர்பாக ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவினை உருவாக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அக்குழுவில் தேசிய சுற்றுச்சூழல் ஆய்வு நிறுவனமான நீரி(NEERI), ஐ.ஐ.டி, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களும், மேலும் தேசிய அளவில் சுற்றுச்சூழல் அறிவியல் சார்ந்து செயல்படக் கூடிய மூன்று பேரையும் உள்ளடக்கிய குழுவாக அந்த நிபுணர் குழு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்குழு பின்வரும் விவரங்களை ஆய்வு செய்யும்.
• தூத்துக்குடி போன்ற ஒரு பகுதியில் தாமிர உருக்கு ஆலை இயங்க முடியுமா, என்னென்ன நிபந்தனைகள் அடிப்படையில் இயங்க முடியும்?
• தொழிற்சாலையின் மீது விதிக்கப்பட வேண்டிய நிபந்தனைகள்
• கடந்த கால வீதிமீறல்களுக்கான இழப்பீடு
• சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் மற்றும் விதிமீறல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்வதற்கான வழிமுறைகள்
இவற்றை ஆய்வு செய்து நிபுணர் குழு வெளியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், இப்படிப்பட்ட முக்கியமான சொத்தினை நாடு இழக்கக் கூடாது. அதேசமயம் வேதாந்தாவினை சில நிபந்தனைகளின் கீழ் இயங்கச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றால் எந்த நிறுவனம் இங்கே தொழில் நடத்த முடியும் என்று கேள்வி எழுப்பினார். மக்களின் உடல்நலன் பாதுகாக்கப்பட வேண்டும் அதேசமயம் தொழில் வசதிகளும் இழக்கப்படக் கூடாது என்று பேசினார்.
அப்போது வாதிட்ட தமிழக அரசு வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், “இந்த குழு அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசின் வாதத்தையும் கேட்ட பிறகே எந்த முடிவுக்கும் வர வேண்டும். பல விதிமீறல்களில் இந்த ஆலை நிர்வாகம் ஈடுபட்டது என்பதால்தான் 100 கோடி ரூபாய் அபராதம் இந்த ஆலைக்கு விதிக்கப்பட்டது. இந்த ஆலை எந்த உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை” என்று சொன்னார்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடும்போது, “ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தினை வெறும் பொருளாதாரம் சார்ந்த கண்ணோட்டத்துடன் மட்டும் பார்க்கக் கூடாது. இந்த விவகாரம் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களின் உடல் நலனுடன் சம்பந்தப்பட்டது. இந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், நிலத்தடி நீருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறுவது உண்மையல்ல, அதனை ஏற்க முடியாது. மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டதால்தான் ஆலை மூடப்பட்டது” என வாதிட்டார்.
நீதிபதி சந்திரசூட் சொன்னது என்ன?
பின்னர் பேசிய நீதிபதி சந்திரசூட், “ஒரு ஆலையை மூடுவது என்பது மிகவும் எளிதானது. ஆனால் பொதுமக்களின் நலனோடு சேர்த்த ஒரு வழியைத் தான் நாங்கள் பரிந்துரைக்க விரும்புகிறோம்…தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்களுக்கு இந்த விவகாரத்தில் நம்பிக்கை வரவேண்டும் என்பதை நாங்கள் ஏற்கிறோம். அந்த நம்பிக்கையை மாநில அரசாங்கம் உருவாக்க முடியும். அதேபோல் நீதிமன்றத்தின் உத்தரவு இன்னும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்த உதவும். மாநில அரசாகிய நீங்கள் ஒத்துழைத்தால் தான் எந்த நிறுவனமும் தொழில் செய்ய முடியும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய வழக்கறிஞர் கோபால் சங்கர நாராயணன் 2018-ம் ஆண்டுக்கு முன்பு மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்த நோட்டீசையும், அதில் குறிப்பிடப்பட்டிருந்த சுற்றுச்சூழல் விதிமீறல்களையும் சுட்டிக்காட்டினார்.
அதனை ஏற்காத நீதிபதிகள், “நாம் ஒன்றும் பனானா ரிபப்ளிக் (Banana Republic) கிடையாது. நாம் சட்டத்தின் விதிகளால் ஆளப்படுகிற குடியரசு. வேதாந்தா நிறுவனம் விதிகளை மீறியிருக்கலாம். ஆனால் நாம் சில விடயங்களில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். அந்த ஆலையை மூடுவதற்கு 5 காரணங்களை உங்களால் காட்ட முடியவில்லை. ஆனால் மற்றொரு பக்கம் ஆலை குறித்து இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்வதற்கு 20 காரணங்கள் இருக்கிறது” என்று கடுமையாகப் பேசினர்.
தேர்தல் முடிவுக்காக காத்திருப்பா?
ஸ்டெர்லைட் திறக்கப்படுவதற்கான காரணங்களை வலுவாக முன்வைத்து நீதிபதிகள் பேசிய சூழலில், இந்த வழக்கு வரும் பிப்ரவரி 20-ம் தேதி இறுதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இப்படி நடந்து கொண்டிருக்கும் நிலையில் தமிழ்நாடு இன்னொரு பக்கம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டால் அது தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் தேர்தல் முடிந்த பிறகு ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் திமுக தரப்புடனும் இது குறித்த உரையாடல் நடந்ததாகவும் கோர்ட் தீர்ப்பு வந்தால் பரிசீலிப்பதற்கு தயாராக இருப்பதாகவும் திமுக மேலிடத்திற்கு நெருங்கிய வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.
விவேகானந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பெண் கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை : பின்னணி என்ன?
சூறாவளிக்காற்று 65 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்… கடலுக்கு செல்ல வேண்டாம்: வானிலை மையம்
விவசாயி சின்னம் கிடைக்குமா? – நீதிமன்றம் ஏறும் சீமான்
மீண்டும் ஒரு கேப்டன் மாற்றம்… எந்த டீம்லன்னு பாருங்க!