’மாணவிகளை வீட்டுக்கு வரச் சொல்லி…’  -கைதான கலாஷேத்ரா ஹரிபத்மன் வாக்குமூலம்! 

தமிழகம்

சென்னை கலாஷேத்ராவில் பரத துணை பேராசிரியராக பணியாற்றும் ஹரி பத்மன், மாணவிகளின் பாலியல் புகாருக்கு உள்ளானதால் ஏப்ரல் 3 ஆம் தேதி சென்னை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.  

கைதுக்குப் பிறகு சென்னை எம்.ஜி.ஆர். நகர் காவல் நிலையத்தில் வைத்து சிறிது நேரம் விசாரிக்கப்பட்ட ஹரிபத்மன், பிறகு  சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி வரை ஹரிபத்மனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஹரிபத்மன்.

கலாஷேத்ராவில் பரத ஆசிரியராக இருந்த ஹரிபத்மன், போலீஸ் கைகளில் சிக்கி  கைதிகளின் ஷேத்ராவான புழல் சிறைக்கு போனது எப்படி?   

சென்னை திருவான்மியூர் பகுதியில் அமைந்துள்ள கலாஷேத்ரா நாட்டியக் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் குறிப்பிட்ட சில பேராசிரியர்கள் இன்டர்னல் மார்க் சொல்லி மிரட்டியும், பிராக்ட்டிகல் என்று வீட்டுக்கு வரச்சொல்லி மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்வதும், பாலியல் வன்கொடுமை செய்வதுமாக இருந்து வந்துள்ளனர்.  பல மாணவிகள் எதிர்கால வாழ்க்கையைக் கருதி படிப்பை முடித்துவிட்டு வெளியில் சொல்லாமல் வெளியேறிவிட்டனர். ஆனால் சில மாணவிகளின் உறுதியான நெஞ்சத்தால் இப்போது உள்ளே போயிருக்கிறார் ஹரிபத்மன். 

கேரளா  மாநிலத்தைச் சேர்ந்த நடன உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அதே கேரளா மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் மாணவி கொடுத்த புகார் மீது அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தி சிறப்பு டீம் ஒன்றை கேரளாவுக்கு அனுப்பி வைத்தார்.  புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரித்து  வாக்குமூலங்களை பெற்றுக் கொண்டு வர சொன்னார். அதன்படியே போலீஸும் கேரளா சென்று வந்தது.

கைதைத் தவிர்க்க கலாஷேத்ராவின் அழுத்தம்!

இதனிடையில்  கலாஷேத்ரா நிர்வாகத்தினர் யார் யார் மூலமாகவோ முயற்சி செய்து ஹரிபத்மனை காப்பாற்ற போராடினார்கள். ஹரிபத்மன் கைதாகக் கூடாது என்று அழுத்தம் வருவதை உணர்ந்த  சென்னை மாநகர கமிஷனர் சங்கர் ஜிவால், இணை ஆணையர் சிபி சக்ரவர்த்திக்கு  இந்த வழக்கில் விரைவாக செயல்பட்டு ஹரிபத்மனை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தார். இதையடுத்து இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி  தனது சிறப்பு டீம் உட்பட மூன்று டீம்களை முடுக்கி விட்டார்.

ஹரிபத்மனை ரிலாக்ஸ் செய்த போலீஸ்

பேராசிரியர் ஹரிபத்மன் சென்னையில் இருப்பதை உறுதி செய்த போலீஸார்,  மூன்று மாநிலங்களில் ஸ்பெஷல் டீம் சென்று தேடி வருவதாக செய்திகளை பரப்பவிட்டனர். அப்போதுதான் ஹரிபத்மன் ரிலாக்ஸாக இருப்பார், அதன் மூலம் அவர் இருப்பிடத்தை அறியலாம் என்பதுதான் போலீஸின் திட்டம். அது கச்சிதமாக வேலை செய்தது. 

இணை ஆணையர் தனது ஸ்பெஷல்  டீம் போலீஸாரோடு ஏப்ரல் 2 ஆம் தேதி டிஸ்கஷன் செய்தார். ஹரிபத்மன் இருக்கும் இடத்தை பல முறை உறுதி செய்தவர் இரவோடு இரவாக பெரம்பூர் பகுதியில் தங்கியிருக்கும் வீட்டை கண்காணிக்க போலீசாரையும்  நியமித்தார். நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி அதிகாலை சுமார் 5.30 மணிக்கு ஹரிபத்மன் தங்கியிருக்கும் வீட்டுக்கு சென்ற போலீஸார் வீட்டு கதவைத் தட்டி ஹரிபத்மனை கைது செய்து, போலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள். ஏப்ரல் 3 ஆம் தேதி காலைப் பொழுது போலீஸாருடன்தான்  விடிந்தது ஹரி பத்மனுக்கு. 

statement of arrested Kalashetra Haripadman

போலீஸ் ஸ்டேஷனில் ஹரிக்கு காபி, நாற்காலி, ஃபேன்

ஹரிபத்மனை கைது செய்த செய்தி இணை ஆணையர் மற்றும் ஆணையருக்கு தெரிவிக்கப்பட்டது. இணை ஆணையர் சிபி சக்ரவர்த்தியின் உத்தரவுப்படி ஹரிபத்மனை  எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் போலீஸார். காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று காபி வாங்கி கொடுத்து ஃபேன் வசதியுள்ள அறையில் நாற்காலியில்  அமரவைத்தனர் போலீஸார்.

ஹரிபத்மன் கைது, விசாரணை  டீமில்  பங்கேற்க பலரும் முன்வரவில்லையாம். இது  மேலிடத்து சமாச்சாரம் ஆகலாம் என்பதால் பலர் தயங்கியிருக்கிறார்கள்.  அடையாறு உதவி ஆணையர் நெல்சன்,  கிண்டி உதவி ஆணையர் சிவா ஆகியோர்  எம் ஜி ஆர் நகர் காவல் நிலையத்திற்கு வந்தார்கள்.  அவருக்கு அடுத்ததாக அடையார் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி வந்தார். 

statement of arrested Kalashetra Haripadman

ஹரிபத்மனிடம்  வழக்கத்துக்கு மாறாக மரியாதையுடனேயே போலீஸார் விசாரணை செய்திருக்கிறார்கள்.  முதலில் அவருக்கு காபி கொடுக்கப்பட்டு, பின்  டிபன் பொங்கல் வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகே விசாரணை தொடங்கியிருக்கிறது.  

மாணவிகள் மேல அக்கறை- ஹரிபத்மன்

’சொல்லுங்க சார்… உங்க மேல உங்க ஸ்டுடன்ட்டே செக்சுவல் அலிகேஷன் சொல்லியிருக்காங்க’ என்றதும், ‘அந்த மாதிரி எதுவுமே நான் செஞ்சதில்லை’ என்று உடனடியாக மறுத்துள்ளார் ஹரிபத்மன்.

’அப்படியா… சரி மாணவிகளை ஸ்பெஷல் பிராக்டிஸ் கொடுக்கணும்னு எதுக்கு உங்க வீட்டுக்கு வரச் சொன்னீங்க?” என்று மீண்டும் கேள்வி வந்தது.

’என் ஸ்டூடன்ட்ஸ் மேல இருக்குற அக்கறையாலதான் வீட்டுக்கு வரச் சொன்னேன். மத்தபடி எந்த தவறும் நான் செய்யலை’ என்று மறுபடியும் கூறியிருக்கிறார் ஹரிபத்மன். 

’ஓ….மாணவிகளுக்கு நீங்க அனுப்பின வாட்ஸ் அப் மெசேஜ்களும் அக்கறையால்தானா?” என்று மீண்டும் கேட்க, ‘நான் தவறான எந்த மெசேஜும் அனுப்பலை’ என்று மறுபடியும் மறுத்திருக்கிறார் ஹரிபத்மன்.

சாதாரணமான இந்த உரையாடல்களுக்குப் பிறகு  உதவி ஆணையர் சில குறிப்பிட்ட  தகவல்களை சொல்லி கேட்டபோதுதான், கொஞ்சம் தயங்கி பேசியுள்ளார் ஹரிபத்மன்  அதன் பிறகு பதில்களும் தடுமாறி தடுமாறி கொடுத்துள்ளார்.

விசாரணையின் போது தூக்கம்?

முற்பகலிலேயே ஹரிபத்மன் தனக்கு தூக்கம் வருவதாக சொல்லியிருக்கிறார். விடியற்காலையிலேயே போலீஸ் எழுப்பி கூட்டி வந்துவிட்டதாலும் காலையில் பொங்கல் சாப்பிட்டதாலும் அவருக்கு தூக்கம் வந்திருக்கிறது.  ஆனால்   விசாரணை அதிகாரிகள் ஹரிபத்மனை தூங்காத அளவுக்கு அவ்வப்போது விசாரணையை முடுக்கிவிட்டனர். பொறுமையாக மரியாதையாக விசாரித்தாலும் தேவையான அளவுக்கு வாக்குமூலத்தை பெற்று விட்டதாக சொல்கிறார்கள் சிறப்பு டீம் போலீஸார்.

சிறையைத் தவிர்க்க க்ளைமாக்ஸ் ;போராட்டம்!

statement of arrested Kalashetra Haripadman

மதியமும் ஹரிபத்மனுக்கு உணவு ஏற்பாடு செய்து மாலையில் அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினார்கள். பத்திரிகையாளர்கள் சரமாரியாக போட்டோ எடுத்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் போலீசாரிடம் இருந்தது.  

ஹரிபத்மனின் வழக்கறிஞர்கள் நீதிபதியிடம், ‘உடல் நிலை சரியில்லை. மருத்துவ மனையில் சேர்க்க அனுமதிக்க வேண்டும்’ என்று சிறைக்கு செல்வதைத்  தவிர்க்க கடைசி நிமிடம் வரை  போராடினார்கள்.  ஆனால் போலீஸார்  மருத்துவமனைப் பரிசோதனை செய்தாகிவிட்டது என்று  நீதிபதியிடம் தெரிவித்தனர்.  இதையடுத்து ஏப்ரல் 13 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார் நீதிபதி. அதன் பின் நேற்று இரவு புழல் சிறையில் அடைக்கப்பட்டார் ஹரிபத்மன்.

statement of arrested Kalashetra Haripadman

ஹரிபத்மனின் வாழ்வில் சட்டம் பரதம் ஆடத் தொடங்கியிருக்கிறது. பார்க்கலாம், இந்த ஆட்டத்தின் விரீயத்தை!

-வணங்காமுடி 

கொடி எரிப்பு, ரத்தக் காயம்: பாஜக- காங்கிரஸ் மோதல்!

ஐ.பி.எல்: வரலாற்று சாதனை படைத்த தோனி

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *