பாலியல் தொல்லை குறித்த புகாரின் பேரில் மாநில மகளிர் ஆணைய தலைவர் கலாஷேத்ராவிற்கு இன்று (மார்ச் 31) நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்.
சென்னை திருவான்மியூர் கலாஷேத்ரா கல்லூரியில் பேராசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக, அறக்கட்டளையின் முன்னாள் இயக்குநர் லீலா சாம்சன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவின் அடிப்படையில் அறக்கட்டளை நிர்வாகம் குழு அமைத்து விசாரணை நடத்தியது.
இந்த விசாரணையில் குற்றங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் சிலர் தங்கள் மீது காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா நேற்று முன் தினம் கலாஷேத்ரா கல்லூரிக்குச் சென்று மறைமுகமாக விசாரணை நடத்தி விட்டுச் சென்றார்.
இந்த விசாரணைக்குப் பிறகு கலாஷேத்ரா மாணவிகள் 200-க்கும் மேற்பட்டவர்கள், தேசிய மகளிர் ஆணையம் குறிப்பிட்ட சிலரிடம் மட்டும் ரகசியமாக விசாரணை மேற்கொண்டது.
பாலியல் தொல்லை குறித்த வெளிப்படையான விசாரணை தேவை என்று நேற்று (மார்ச் 30) உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மாணவி ஒருவர், ”ஹரிபத்மன், சஞ்சிதலால், ஸ்ரீநாத், சாய் கிருஷ்ணன் ஆகிய நான்கு பேர் பாலியல் தொல்லை கொடுத்து வருகின்றனர்.
இதில், சஞ்சிதலால் பசங்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருந்தார்.
தொடர்ந்து இன்று (மார்ச் 31) இந்த விவகாரம் தொடர்பாக கலாஷேத்ரா மாணவிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் மத்திய கலாச்சார அமைச்சகத்திற்கு மின்னஞ்சல் மூலமாக கடிதம் எழுதியிருந்தனர்.
இதையடுத்து சென்னை கூடுதல் காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்த போது,
“பாலியல் தொல்லை குறித்து இதுவரை எழுத்துப்பூர்வமான புகாரும் எங்களுக்கு வரவில்லை. எங்களிடம் புகார் வந்தால் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், மாநில மகளிர் ஆணைய தலைவர் கலாஷேத்ராவிற்கு நேரில் சென்றுள்ளார். அவர் அங்குள்ள மாணவிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் மாணவிகள் இன்று மாலைக்குள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்கப்போவதாகவும் புகார் அளித்துள்ளார்.
மோனிஷா
ஓபிஎஸ் மேல்முறையீடு வழக்கு: ஏப்ரல் 3-க்கு ஒத்திவைப்பு!
“என்னை அதிமுகவில் சேர்க்க வேண்டும்”- நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு வாதம்!