பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்த நபரை டிக்கெட் பரிசோதகர்கள் தாக்கிய விவகாரத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கடந்த மே 30 ஆம் தேதி தினேஷ் என்ற நபர் கிண்டி பேருந்து நிறுத்தத்தில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பக்கம் ஏறியுள்ளார்.
பேருந்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் பின்புறம் இருந்த நடத்துநரிடம் டிக்கெட் வாங்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதனால் சக பயணிகளிடம் பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்குமாறு கேட்டுள்ளார்.
ஆனால் அதற்குள் அடுத்த பேருந்து நிறுத்தமான சின்னமலையில் நின்றது. அங்கிருந்த டிக்கெட் டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் டிக்கெட் வாங்காமல் இருந்த தினேஷை பேருந்தை விட்டு இறங்க சொல்லியுள்ளனர்.
அதற்கு தினேஷ் என்னுடன் சேர்த்து மொத்தம் 15 பயணிகள் கடந்த பேருந்து நிறுத்தத்தில் தான் (கிண்டி) ஏறினோம். கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததால் டிக்கெட் வாங்க முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். சக பயணிகளும் தினேஷிற்கு ஆதரவாகப் பேசியுள்ளனர்.
ஆனால் இதனைப் பொருட்படுத்தாத அதிகாரிகள் தினேஷின் உடைமைகளைத் தூக்கி வீசி, அவரையும் கீழே தள்ளியுள்ளனர்.
இது குறித்து தினேஷ் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் மேற்கண்ட தகவல்களைக் கூறி, டிக்கெட் பரிசோதனை செய்யும் அதிகாரிகள் சட்டை காலரை பிடித்து தன்னை அவமானப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த சம்பவத்தின் போது தன்னுடைய கைக்கடிகாரம் மற்றும் மடிக்கணினி சேதம் அடைந்ததாகவும், தான் தப்பித்து செல்ல முயற்சி செய்யாத போதும் தன்னை ஒரு குற்றவாளி போல நடத்தியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அந்த நோட்டீஸில் ஆங்கில செய்தி நிறுவனமான “டைம்ஸ் ஆஃப் இந்தியா”வில் ஜூன் 1 அன்று வெளியான செய்தியின் அடிப்படையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
‘தமிழிசை மீது முழு நம்பிக்கை”: பிரதமர் மோடி வாழ்த்து!
காங்கிரஸின் 5 வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?