தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் வி.கண்ணதாசன் ஆகியோர் புதிய உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தின் 25வது ஆண்டு வெள்ளி விழா, கடந்த ஆகஸ்ட் மாதம் 6ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இதில் விழா மலரை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மனித உரிமை பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.
அப்போது பேசிய அவர், ”வெள்ளி விழா ஆண்டை முன்னிட்டு, ஆணையத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
அதன்படி, இவ்வாணையத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளானது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில், இன்று தேர்வுக் குழுவால் இருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு இரண்டு உறுப்பினர்கள் தேர்வு செய்வதற்கான தேர்வுக் குழுக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று (டிசம்பர் 20) சட்டப்பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு கலந்துகொண்டார். இந்தத் தேர்வுக் குழுக் கூட்டத்தில், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் ராஜ இளங்கோ மற்றும் வழக்கறிஞர் வி.கண்ணதாசன் ஆகியோரை நியமனம் செய்ய இக்குழு பரிந்துரை செய்துள்ளது.
அதன்படி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக ராஜ இளங்கோவும், கண்ணதாசனும் நியமனம் ஆகியிருக்கிறார்கள்.
இவ்வாணையத்தில், தற்போது 2 புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமிருக்கும் காலிப்பணியிடங்களையும் விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
ஜெ.பிரகாஷ்
தமிழ் மொழி வளர்ச்சி வழக்கு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
பொது இடத்தில் மது: டாஸ்மாக்கும் தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவு!