விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை நடத்தி 6 வாரத்தில் அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் இன்று (மார்ச் 28) உத்தரவிட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் உதவி காவல் துறை கண்காணிப்பாளராக பொறுப்பு வகித்தவர் பல்வீர் சிங். இவர் சிறுசிறு வழக்குகளில் கைதாகி காவல்நிலையத்தில் வைக்கப்படும் விசாரணை கைதிகளை கடும் சித்ரவதை செய்வதாக புகார் எழுந்தது.
சுமார் 10 பேரின் பற்களை கட்டிங் பிளேயர் கொண்டு பிடுங்கியதாகவும், புதிதாக திருமணமான இளைஞர் உட்பட 2 பேரின் ஆணுறுப்பை தாக்கியதாகவும் ஏஎஸ்பி மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகி மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனையடுத்து பற்களை பிடுங்கி தண்டனை அளித்த ஏஎஸ்பி பல்வீர் சிங், கல்லிடைக்குறிச்சி காவல் ஆய்வாளர் ராஜகுமாரி, சிறப்பு உதவி ஆய்வாளர் ராமலிங்கம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து உதவி ஆட்சியர் தலைமையில் விசாரணை நடத்த நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். அதன்படி சேரன்மகாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் விசாரணை தொடங்கிய நிலையில், ஏஎஸ்பி பல்வீர் சிங் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அம்பாசமுத்திரம் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக வெங்கடேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இன்று வழக்குப் பதிவு செய்துள்ளது.
மேலும் விசாரணை கைதிகளின் பற்களைப் பிடுங்கிய விவகாரம் குறித்து 6 வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கைத் தாக்கல் செய்ய மாநில ஆணையத்தின் விசாரணை பிரிவு ஐ.ஜிக்கு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
பரோட்டாவுக்காக இளம் நடிகை தற்கொலை?
நடிகரை அட்ஜெஸ்ட்மென்டுக்கு அழைத்த பிரபல நடிகை!