தமிழக மருத்துவ மாணவர் மதன்குமார் ஜார்கண்ட் மாநிலத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று (நவம்பர் 4) கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாமக்கல் வட்டம் வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த மதியழகன் மகன் மதன்குமார் (வயது 28) ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள இராஜேந்திரா மருத்துவக் கல்லூரியின் விடுதியில் தங்கி இரண்டாம் ஆண்டு தடயவியல் மருத்துவம் படித்து வந்த நிலையில், மதன்குமார் காணாமல் போய் பின்னர் அவரது உடல் எரிந்த நிலையில் சடலமாக அவர் தங்கியிருந்த விடுதியின் பின்புறத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த மனவேதனையடைந்தேன்.
உடனடியாக தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் ஜார்க்கண்ட மாநில அரசுடன் தொடர்பு கொண்டு மதன்குமாரின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொண்டதன் அடிப்படையில், அவரது உடல் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு, அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரால் அஞ்சலி செலுத்தப்பட்டு, இன்று காலையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
மேலும், மதன்குமார் மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து ஜார்க்கண்ட் மாநில காவல் துறையினரும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த துயரமான சூழ்நிலையில். மதன்குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது, நிவாரண நிதியிலிருந்து மூன்று இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், மதன்குமார் இறந்தது குறித்து உரிய விசாரணையை விரைந்து மேற்கொண்டு, அவரது இறப்பிற்கு நீதி கிடைக்கும் வகையில், துரித நடவடிக்கை மேற்கொள்ளவும் நான் கடிதம் மூலம் ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரனை வலியுறுத்தியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
“பெரியார்தான் அடித்தளம்”: கி.வீரமணிக்கு சோனியா காந்தி கடிதம்!
பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற உணவுகள்: அண்ணாமலை குற்றச்சாட்டு!