சென்னை டூ குமரி வரை போதை ஒழிப்பு உறுதிமொழி: சில நிமிடங்களில் உலக சாதனை!

Published On:

| By Monisha

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களும் இன்று (ஆகஸ்ட் 11) போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சி தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மற்றும் பள்ளிகளில் காணொளி வாயிலாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும் முதலமைச்சர் உறுதிமொழி வாசிக்க மாணவர்கள் திருப்பிக் கூறி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உறுதிமொழி ஏற்றுக்கொண்ட பிறகு நிகழ்ச்சியில் முதல்வர் தொடர்ந்து பேசினார்.

alt="Stalin suggested two ways to eliminate drugs"

இரண்டு வழிகளில் போதை பொருள் ஒழிப்பு

“போதை பொருட்களின் பயன்பாடும் அதற்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. அதனை தடுக்க வேண்டுமானால் இரண்டு விதமான வழிகளில் நாம் சென்றாக வேண்டும்.

முதல் வழி போதை பொருள் பயன்பாட்டை கட்டுபடுத்துவது மற்றும் அதனை விற்பவர்களை கைது செய்வது. இரண்டாவது வழி போதை பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது. இந்த வழிமுறைகளோடு பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

சென்னைக் கிறித்தவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்

தடுப்பு நடவடிக்கைகள்

கஞ்சா விளைவிப்பதை முற்றிலுமாக தடுக்து மலை அடிவாரங்களை கண்காணிக்க வேண்டும். மேலும் அண்டை மாநிலங்களில் இருந்து போதை பொருட்கள் கடத்தி வருவதை தடுக்க வேண்டும். தமிழகத்தின் எல்லை மாவட்டங்களில் சோதனை சாவடியை அதிகரிக்க வேண்டும்.

தஞ்சாவூர் , அரசர் மேல்நிலைப்பள்ளியில்

முக்கியமாக, கடலோர மாவட்டங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தி காவல்துறையின் ரோந்துப் பணியையும் அதிகரிக்க வேண்டும். இது மட்டுமில்லாமல் அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

பழனி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்

போதை பொருள் அதிகமாக விற்பனையாகக் கூடிய இடங்களை நிரந்தரமாக கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் போதை பொருட்கள் விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அரசு போதை பொருள் தொடர்பான சட்டங்களை கடுமையாக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. சட்டங்களை திருத்தி சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க திட்டம் ஒன்றும் இருக்கிறது.

மதுரை அமெரிக்கன் கல்லூரி மற்றும் காமராஜர் பல்கலை கழக மாணவ – மாணவியர்

போதை ஒழிப்பு அரசாங்கத்தின் கடமை

போதை பொருள் விற்பவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்காக சைபர் கிரைம் உருவாக்க உள்ளோம். போதை பொருள் தடுப்பு பிரிவுக்கென்று தனியாக ஒரு ’இன்டலிஜென்ஸ் செல்’ ஏற்படுத்தியுள்ளோம். இதற்கான பொறுப்புகளை மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். மேலும் இவை அனைத்தும் அரசாங்கத்துடைய கடமை.

சட்டம் தன் கடமையை செய்யும். கடமைகளை செய்ய தவறும் அதிகாரிகள் மீது சட்டரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், போதை பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் தனிப்பட்ட குற்றவாளிகளாக கருதப்பட மாட்டார்கள் சமூகத்தையே கெடுக்கக் கூடிய குற்றவாளிகளாக கருதப்படுவார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க எந்த வித தயக்கமும் காட்ட முடியாது” என்று கூறியுள்ளார்.

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்ற போது

இதுவரை போதை பொருள் விற்ற 41,000 பேர் கைது செய்யப்பட்டு, 50 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். போதை பொருள் ஒருவரிடம் இருந்து மற்றவரிடம் கைமாறும் அந்த சங்கிலியை உடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

போதை என்பது தனிநபர் பிரச்சனை அல்ல சமூக பிரச்சனை, போதையை முற்றிலும் தடுக்க வேண்டும் என்று கூறுவதன் காரணம், சமூக பிரச்சனைகளை தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் என்று தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு விழிப்புணர்வு காவலர்களாக பெற்றோரும் ஆசிரியர்களும் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

உலக சாதனை

இன்று தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உறுதிமொழி ஏற்றனர். ஒரே நாளில் குறிப்பாக சில நிமிடங்களில் அதிகபட்ச நபர்களால் உறுதிமொழி எடுக்கப்பட்டு உலக சாதனை படைத்தமைக்காக வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் யூனியன் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகிய அமைப்புகள் அதற்கான சான்றிதழ்களை முதல்வர் மு.க ஸ்டாலினிடம் இன்று வழங்கியது.

மோனிஷா

மு.க.ஸ்டாலினை அண்ணா என அழைத்த தேஜஸ்வி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share