தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகளை காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 7) திறந்து வைத்தார்.
தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கோயம்புத்தூர், கடலூர், ஈரோடு, கரூர், மதுரை, புதுக்கோட்டை, சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் ரூ. 405.90 கோடி மதிப்பீட்டில் 4,644 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளை இன்று (டிசம்பர் 7) தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
பின்னர் 4500 பயனாளிகளுக்குக் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஒதுக்கீட்டு ஆணை, பயனாளிகள் தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு பணி ஆணை மற்றும் 155 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 195 மனைகளுக்கான உரிமைப் பத்திரங்களை முதல்வர் வழங்கினார்.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் கீழ் இயங்கி வரும் நகர் சீரமைப்பு இயக்கத்தில் தமிழ்நாடு அரசு தேர்வாணையர் மூலம் தேர்வு செய்யப்பட்ட 27 உதவி இயக்குநர் பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளையும் முதலமைச்சர் இன்று வழங்கினார்.
மோனிஷா