stalin madras presidency college

மெட்ராஸ் பிரெசிடென்ஸி கல்லூரி : சிறப்பு மாணவர்களுக்கான விடுதி கட்டடத்தை திறந்து வைத்த ஸ்டாலின்

சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர்களுக்கான விடுதிக் கட்டடங்களை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 4) திறந்து வைத்தார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் 2022 வருடம் ஜுலை 5ஆம் தேதி நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், “300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும்” என்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் ரூ. 21.6 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதி கட்டடங்களை ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

மாணவர்களுக்கு தனிக் கட்டடமாகவும், சிறப்பு மாணவிகளுக்கு தனிக் கட்டடமாகவும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி பரப்பளவில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.

அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் (Tactile Guiding Surface Indicators) கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள் (அணுகக்கூடிய வடிவங்களில் வழி கண்டறிதல் மற்றும் தகவல் அடையாளங்கள் பொருத்தப்பட்டுள்ளன),

அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறையிலும் சிறப்பு மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு வகை அலமாரிகள், அனைத்து அறைகளிலும் ஸ்மார்ட் லாக், பிரத்யேக சாய்தள அமைப்பு,

ஒவ்வொரு குளியலறை மற்றும் கழிவறைகளில் அவசரக் குறியீடு விளக்குகள், கழிவறைகளில் சிறப்பு கிராப் பார்கள் (Special Type Grab Bars), நான்கு மின்தூக்கிகளிலும் ஒலி மற்றும் ஒளி அமைப்பான்கள் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இக்கட்டடமானது, காப்பாளர் அறைகள், அலுவலக அறைகள், உணவு உண்ணும் அறைகள், பொது அறைகள், சமையலறை போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக முதல்வர் ஸ்டாலினும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் விடுதிகளை திறந்து வைத்து பார்வையிட்ட பின், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவர்களிடம் அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா, வேறு என்ன வசதிகள் தேவை என்பது குறித்தும் விசாரித்தனர்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

விஜய் – அண்ணாமலையை பாராட்டிய சீமான்

மிதமான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்!

ரஹ்மான் ரூட்டில் தயாரிப்பாளர் சங்கம்… யூடியூப் ரிவ்யூவர்ஸுக்கு செக்!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts