stalin ashwini vaishnaw

ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவேண்டும்: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் கடிதம்!

இந்தியா தமிழகம்

தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டை பாதை போன்ற திட்டங்களைச் செயல்படுத்த போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு இன்று(ஆகஸ்ட் 19) கடிதம் எழுதியுள்ளார்.

சில நாட்களுக்கு முன், திமுக நாடாளுமன்ற மக்களைக் குழு தலைவரும் அக்கட்சியின் பொருளாளருமான டி.ஆர்.பாலு ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் “ தமிழ் நாடு ரயில்வே திட்டங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக படஜெட் தாக்கல் செய்யப்பட்டதுமே, ரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான ‘பிங்க் புத்தகம்’ வெளியாகும்.

ஆனால் இம்முறை ‘பிங்க் புத்தகத்தை’ பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த பிறகு வெளியிட்டிருப்பதே பாஜகவின் சதியை வெளிக்காட்டியிருக்கிறது.

இடைக்கால பட்ஜெட்டின் ‘பிங்க் புத்தகத்தில்’ தெற்கு ரயில்வேவின் புதிய வழித்தடங்களுக்கு ரூ.976 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இப்போது வெளியான ‘பிங்க புத்தகத்தில்’ அந்தத் தொகையை ரூ.301 கோடியாகக் குறைத்துவிட்டார்கள்.

மேலும், தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் முக்கிய ரயில் திட்டங்களுக்கு வெறும் ரூ.1000 ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது” என்று டி.ஆர்.பாலு குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழ்நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின், மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் “வழக்கமான ரயில்வே பட்ஜெட்டில் தெற்கு ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறிப்பிடத்தக்க  அளவிற்கு குறைந்திருப்பதால், அதன் விளைவாகத் தமிழ்நாட்டில் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் தமிழ்நாட்டில் புதிய வழித்தடங்கள், இரட்டைப் பாதை மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வசதிகள் தொடர்பான திட்டங்களுக்குப் போதுமான அளவிற்கு நிதி ஒதுக்கவேண்டும்.

இந்திய ரயில்வே-க்கான வழக்கமான பட்ஜெட்டை இடைக்கால பட்ஜெட்டுடன் ஒப்பீட்டு பார்க்கும் பொழுது வருத்தமே மிஞ்சுகிறது. கணக்கு தலைப்பு 11-புதிய பாதைகள் என்பதின் கீழ் இடைக்கால ஒதுக்கீடாக ரூ.976.1 கோடி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் வெறும் ரூ.301.3 கோடி தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது, கணக்கு தலைப்பு 15-இரட்டைப் பாதையாக்கல் என்பதின்கீழ்  இடைக்கால ஒதுக்கீடாக ரூ.2214.4 ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், வழக்கமான பட்ஜெட் ஒதுக்கீட்டில் ரூ.1928.8 தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட நிதி ஒதுக்கீட்டில், புதிய வழித்தடத் திட்டங்களுக்கான ஒதுக்கீட்டில் ரூ.674.8 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடிக் குறைப்பு செய்யப்பட்டுள்ளதால், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பல திட்டங்களின் முன்னேற்றம் கடுமையாகப் பாதிக்கப்படும்.

அதேபோல், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை ரூ.285.64 அளவிற்குக் குறைத்திருப்பது, தமிழ்நாட்டில் மிகவும் அத்தியாவசியமாக உள்ள இரட்டைப் பாதை திட்டங்களைச் செயல்படுத்துவதை நிச்சயம் தாமதப்படுத்தும்.

நிதிப் பற்றாக்குறை காரணமாக இந்த முக்கிய திட்டங்களை மேலும் தாமதப்படுத்தக் கூடாது. இது தொடர்பாக ரயில்வே துறை அமைச்சர்  தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

பாஜக – திமுக இடையே ரகசிய உறவா? – எடப்பாடிக்கு எல்.முருகன் பதில்!

மருமகனை டாப் ஹீரோவாக்க களமிறங்கும் அர்ஜூன்… ஏழுமலை 2 பாராக்!

இரண்டு மாவட்டங்களில் கனமழை அலர்ட்: வானிலை மையம் வார்னிங்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *