சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9) மாலை ஆய்வு மேற்கொண்டார்.
வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று மாலை நிலவரப்படி மாமல்லபுரத்திற்குத் தென்கிழக்கில் 135 கி.மீ தொலைவில் நிலை கொண்டிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மணிக்கு 14 கி.மீ. வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருகிறது. புயல் பாதிப்பை எதிர்கொள்ள அரசு தரப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி ஆகியோர் உடன் இருந்தனர்.
என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார். வீடியோ கால் மூலம் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் கள நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
அதுபோன்று விழுப்புரம் மாவட்ட மரக்காணம் பகுதி நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களிடம் வீடியோ கால் மூலம் பேசினார். “அங்கு நிலைமை எப்படி இருக்கிறது. எல்லோரும் கவனமாக இருங்க” என்று அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நேரடியாக அந்தந்த பகுதிகளுக்கு சென்று என்னென்ன செய்யலாம் என கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எந்த மழை வந்தாலும், எவ்வளவு காற்று அடித்தாலும் அதை சமாளிப்பதற்கு, மக்களை காப்பதற்கு உரிய நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. ஒரு சில முகாம்களில் தற்போது மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஒரு சில முகாம்களில் தங்கவைக்கப்படவில்லை. அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
பிரியா
ஆளுநர் தகுதி நீக்கம்: ராஜ்யசபாவில் தனிநபர் மசோதா
ராஜேந்திர பாலாஜியை சிக்க வைத்தவர் சிக்கியது எப்படி?