தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைத் தொடர்ந்து நேற்று (ஜனவரி 15) மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பிரபல மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசாவின் பூரி கடற்கரையில் திருவள்ளுவர் உருவத்தை மணற்சிற்பமாக வடிவமைத்துள்ளார்.
ஒடிசா மாநிலம் பூரியைச் சேர்ந்த சுதர்சன் பட்நாயக், தன்னுடைய ஏழாவது வயதிலிருந்து மணலில் சிற்பம் செதுக்குவதைத் தொடங்கினார். உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளை மையமாக வைத்து இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிற்பங்களை வடித்துள்ளார். நிறைய பதக்கங்களை உலக அளவில் வென்றுள்ளார். மேலும், உலக சாதனையாளர் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். அவருக்கு 2014-ம் ஆண்டில் இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியது.

இந்த நிலையில் கலைஞர் சுதர்சன் பட்நாயக், கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் சிலையை மணற்சிற்பமாக வடிவமைத்து மரியாதை செலுத்தியுள்ளார். அந்த மணற்சிற்பத்தில், “திருவள்ளுவருக்கு அஞ்சலி, பேரறிவுச் சிலை” என குறிப்பிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது வலைதளத்தில் சுதர்சன் பட்நாயக்கின் பதிவை பகிர்ந்து நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
அந்த பகிர்வுடன், “சிறுமதியாளர்கள் சுருக்க நினைத்தாலும் பேரறிவால் பொலிகிறார் அய்யன் வள்ளுவர். மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ்: காணும் பொங்கல் முதல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வரை!