சென்னையில் தேங்கியுள்ள மழை நீர் விரைவில் வடிந்துவிடும் என்று மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. சென்னையில் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. அதனை அகற்றும் பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் சென்னை மேயர் பிரியா, மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை தேனாம்பேட்டையில் மழைநீர் பாதிப்புகளை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “சென்னையில் எந்த சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேங்கவில்லை. நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாநில அரசு போதுமான நிதியை ஒதுக்கீடு செய்ததால் இன்றைக்கு தேவையான மழைநீர் வடிகால்களை கட்டியுள்ளோம். அதனால் பொதுவாழ்க்கை பெருமளவு பாதிக்காத அளவிற்கு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எவ்வளவு தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று பொதுப்பணித்துறையில் இருந்து முடிவு செய்கிறார்கள். அதே போல் வெயில் இருக்கிறது. தண்ணீர் திறப்பதை சிறிது நேரம் நிறுத்துங்கள் என்று சொன்னால், நம்முடைய வேண்டுகோளுக்கு ஏற்ப அதனையும் செய்கிறார்கள். அரசாங்கம் சார்பில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். கண்டிப்பாக தேங்கியுள்ள தண்ணீரும் விரைவில் வடிந்துவிடும்.
மழை பெய்யும் போது தண்ணீர் தேங்குவது உண்மை. அதே நேரத்தில் தண்ணீர் வடிந்துவிட்டது என்பதை தெரியப்படுத்தவில்லை என்றால் பொதுமக்கள் அச்சமடைந்து விடுவார்கள். 16 ஆயிரம் ஊழியர்கள் இரவு பகல் பார்க்காமல் பணியில் ஈடுபட்டுள்ளனர். வட சென்னையில் அறநிலையத்துறை அமைச்சரும், தென் சென்னையில் சுகாதாரத்துறை அமைச்சரும் இருக்கிறார்கள்.
சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தை 24 மணி நேரமும் வேலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா