பரங்கிமலையில் மாணவி கொலை: டார்ச்சர் செய்த இளைஞர்!

Published On:

| By Kalai

சென்னை பரங்கிமலையில் இளைஞர் ஒருவர், கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த விவகாரத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.

சென்னை ஆதம்பாக்கம் ராஜா தெரு காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் ராமலட்சுமி. ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சத்யபிரியா, தியாகராயர் நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

அதே பகுதியைச் சேர்ந்தவர் தயாளன். காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சதீஷ்.

காவலர் குடியிருப்பில் இருக்கும்போது சதீஷும், சத்யபிரியாவும் நண்பர்களாக பழகியிருக்கின்றனர். அதன்பிறகு சதீஷ், சத்யபிரியாவை காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

சதீஷை எச்சரித்த சத்யபிரியாவின் பெற்றோர் இதுகுறித்து பரங்கிமலை காவல்நிலையத்தில் புகாரும் அளித்திருக்கின்றனர். போலீசாரும் சதீஷை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இருந்தாலும் சதீஷ், சத்யபிரியாவை பின்தொடர்ந்து செல்வதை நிறுத்திக் கொள்ளாமல் இருந்திருக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் சத்யபிரியாவின் கல்லூரி அருகே சென்ற சதீஷ் அவரை அடித்தும் உள்ளார். இதுதொடர்பாக தியாகராய நகரிலும் ஒரு புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்தநிலையில், சத்யபிரியா இன்று (அக்டோபர் 13) கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் காத்திருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சதீஷ் காதலிக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அந்த சமயம் பரங்கிமலை நோக்கி மின்சார ரயில் வந்திருக்கிறது. ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த சதீஷ், சத்யபிரியாவின் கையைப் பிடித்து இழுத்து தண்டவாளத்தில் தள்ளியுள்ளார்.

அவர் விழுவதற்கும் ரயில் வருவதற்கும் சரியாக இருந்ததால், ரயில் சத்யபிரியாவின் தலை மீது ஏறியது. இதில் நிகழ்விடத்திலேயே சத்யபிரியா உயிரிழந்தார். இதைப்பார்த்து அங்கு இருந்த ரயில் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்த நிலையில், சாவகாசமாக சதீஷ் மற்ற உடமைகளை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றிருக்கிறார்.

தகவல் அறிந்து வந்த ரயில்வே எஸ்.பி. உமா ரயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் சத்யபிரியாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

ஏற்கனவே புகார் உள்ளதால் பரங்கிமலை காவல் நிலைத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. சதீஷைப் பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ரயில்வே போலீசார் சார்பாக 4 தனிப்படைகளும், பரங்கிமலை துணை ஆணையர் தலைமையில் 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

சதீஷ் வீடு பூட்டப்பட்ட நிலையில், அவரின் இருசக்கர வாகனம் மட்டும் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவரது உறவினர்களும் தலைமறைவாகியுள்ளனர்.

சதீஷின் புகைப்படத்தை காட்டி நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் போலீசார் தேடி வருகின்றனர். மேலும் வெளியூருக்கு தப்பிச் செல்லாமல் இருக்க சோதனைச் சாவடிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

காதலால் இளைஞர் ஒருவர் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கொலை செய்திருக்கும் நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கலை.ரா

ரயில் முன் தள்ளிவிட்டு இளம்பெண் கொலை: 7 தனிப்படைகள் அமைப்பு!

என் அம்மாவை திருநங்கைதான் பார்த்துக் கொள்கிறார்: அன்பில் மகேஷ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel