ரயில் நிலைய கொலை: சிபிசிஐடிக்கு கிடைத்த 4 முக்கிய வீடியோ காட்சிகள்!
கல்லூரி மாணவி சத்யா கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளில் 4 முக்கிய வீடியோக்களை நீதிமன்றத்தில் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி பரங்கிமலை ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவி சத்யா, சதீஷ் என்ற இளைஞரால் ரயில் முன் தள்ளி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
மகளின் இறப்பை தாங்க முடியாமல் தந்தை மாணிக்கமும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். இந்த இரண்டு மரணங்களும் தமிழக மக்களின் நெஞ்சங்களை உலுக்கியது.
கொலை செய்துவிட்டு தப்பியோடிய சதீஷை 7 தனிப்படைகள் அமைத்து தேடி வந்த போலீசார் துரைப்பாக்கம் அருகே மடக்கி பிடித்தனர்.
சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். காதலை கைவிட்டதால் சத்யாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்ய நினைத்ததாக பல தகவல்களை போலீசிடம் தெரிவித்தார் சதீஷ்.
சத்யா கொலை வழக்கு ரயில்வே போலீசிடம் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர்.
சத்யா வசித்து வந்த ஆலந்தூர் காவலர் குடியிருப்பு மற்றும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து அக்டோபர் 17 ஆம் தேதி 4 குழுக்களாகப் பிரிந்து, ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீடு, தியாகராய நகரில் சத்யா படித்து வந்த கல்லூரி, பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர் மற்றும் ஊழியர்கள், ஏற்கனவே சதீஷ் மீது புகார் அளிக்கப்பட்ட மாம்பலம் மற்றும் செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் நிலையம் ஆகியவற்றில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.
மூன்றாவது நாளான நேற்று ஆலந்தூரில் உள்ள சத்யாவின் வீட்டிலிருந்து பரங்கிமலை ரயில் நிலையம் வரை உள்ள சிசிடிவி காட்சிகளை சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில், ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களில் பதிவான 4 வீடியோ காட்சிகளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
22 சிசிடிவி கேமராக்களில் பதிவான 4 முக்கிய வீடியோ காட்சிகள் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
அத்துடன் சதீஷை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்கவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
கலை.ரா
ஜூனியர் என்.டி.ஆர்-ஐ ஆச்சரியப்படுத்திய தூய்மைப் பணியாளர்!
ஸ்டாலினை சந்தித்தேனா? எடப்பாடிக்கு பன்னீர் சவால்!