நிர்மலா தேவி ’குற்றவாளி’ : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published On:

| By christopher

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்தியதாக 2018ல் தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி ’குற்றவாளி’ என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 29) தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்மலா தேவி, அங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.

அவர்  தன்னிடம் படிக்கும் மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக 2018 மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது. அதனைத்தொடர்ந்து  நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவிகள் மற்றும் கல்லூரி செயலாளர் ராமசாமி புகார் அளித்தார்.

அதனடிப்படையில் 2018, ஏப். 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் போலீஸார் நிர்மலாதேவியை கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

அவர்களது விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு இன்றைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இன்று நடந்த வழக்கு விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி ஆஜரான நிலையில், அவர் ’குற்றவாளி’ என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் இன்று தீர்ப்பளித்துள்ளார்.

அதே வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவர் மீதும் குற்றவாளிகள் என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட நிர்மலா தேவி வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், நிர்மலா தேவி  குற்றமற்றவர் என நிரூபிக்க ஆதாரம் உள்ளதாகவும், அவர் மீது தண்டனை விதிக்க கூடாது என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திர சேகர், மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்திய நிர்மலா தேவிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கோரினார்.

இதனையடுத்து நிர்மலா தேவி மீதான தண்டனை விவரங்களை பின்னர் அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நடிப்புக்காக அல்லாமல் பிரகாஷ் ராஜுக்கு முதல் விருது!

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம் : சிபிசிஐடி வழக்குப்பதிவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel