கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பெய்த பெருமழையின் போது, 800 ரயில் பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்ரீவைகுண்டம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு ‘அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்தது.
டிசம்பர் 17-ஆம் தேதி திருச்செந்தூரில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், 800 பயணிகளுடன் சென்னை நோக்கி புறப்பட்டது.
கனமழை காரணமாக, ஸ்ரீவைகுண்டம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், ரயில்வே தண்டவாளங்கள் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது.

இந்தசூழலில், பணியில் இருந்த ரயில்வே மாஸ்டர் ஜாபர் அலி, சாமர்த்தியமாக ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயிலை நிறுத்தினார். நான்கு புறமும் தீவு போல வெள்ளத்தில் சிக்கிய பயணிகள், மூன்று நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில், பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டர் ஜாபர் அலிக்கு ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான அதி விஷிஸ்ட் ரயில் சேவா புரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜாபர் அலி கூறும்போது, “டிசம்பர் 17-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணிக்கு வேலைக்கு வந்தேன். இரவு 9.02 மணிக்கு டிராக் மிகவும் மோசமாக இருக்கிறது என்று தகவல் வந்தது. உடனே மதுரை கண்ட்ரோல் ரூமிடம் சொல்லி டிரையினை ஸ்ரீவைகுண்டத்தில் நிறுத்திவிட்டேன்.

டிரெயினில் மொத்தம் 800 பயணிகள் இருந்தனர். அதில் 200 பயணிகளை அருகில் இருந்த பள்ளியில் தங்க வைத்தோம். நான்கு பக்கமும் தண்ணீர் சூழ்ந்ததால், மற்ற 600 பயணிகளும் டிரெயினிலேயே இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனால், பயணிகள் வண்டியை எடுக்க சொல்லி எங்களிடம் சண்டை போட்டார்கள். ஆனால், நிலைமை சரியானால் தான் டிரெயினை எடுக்க சொல்வேன் என ஸ்டிரிக்டாக சொல்லிவிட்டேன்.
அதனால் தான் 800 பயணிகளையும் பத்திரமாக மீட்க முடிந்தது. அனைவரையும் மீட்ட பிறகு, டிசம்பர் 19-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு தான் வேலை முடிந்தது. எனக்கு விருது அறிவித்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக – பாஜக கூட்டணி? டிடிவி தினகரனுக்கு ஜெயக்குமார் பதில்!
”பாஜக மீது எடப்பாடிக்கு பயமும் அதிகம்… பாசமும் அதிகம்” : கே.என்.நேரு விமர்சனம்!