ஸ்ரீராம் சர்மா
எனது வாழ்நாள் வேட்கையான வேலுநாச்சியார் வெளிப்பாடு குறித்தானதொரு நிறைவான பணிக்காக மும்பை சென்றிருந்தேன்.
இந்த முறை இரு வார காலம் அங்கே தங்க நேர்ந்து விட்டது. அந்த பதினைந்து நாட்களில் எனக்கேற்பட்ட அதிர்ச்சிகளும் – ஆச்சரியங்களும் பலப்பல…
வழக்கம் போலதனை என் மின்னம்பலத்தாரிடம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் !
முதல் அதிர்ச்சியாக விஸ்ட்டாரா ஹேர்வேஸ் விமானப் பணிப் பெண்ணின் வசீகர மென்னகையை மூடி மறைத்திருந்த அந்தப் பாழும் முகக் கவசம்.
மும்பை இறங்கியதும் தங்குமிடமான வெஸ்ட் அந்தேரியை நோக்கி ஆட்டோவில் பயணித்து முடித்தவனிடம் – அந்த கான்பூர் ஆட்டோக்காரர் கடமையாக எண்ணித் திருப்பித் தந்த அந்த ஏழு ரூபாய்.
“கூல் பாய்சாப் , ஆப்கே பாஸ் ரகோனா” என ஹிந்தியாடிய என்னை நோக்கி அவர் எறிந்த அந்த ‘திடுக்’ பார்வை !
அதனைக் கடந்து, போனிகபூர் போன்ற பெரும் பணக்காரர்கள் வசிக்கும் சாலைக்குப் பின்புறம் அமைந்திருந்த “க்ரீன் பார்க்” எனப்படும் அந்த கேட்டட் கம்யூனிட்டியில் லக்கேஜை மெல்ல உருட்டிச் சென்று லிஃப்ட்டில் ஏறி ஐந்தாம் ஃப்ளோரில் நின்ற என்னை வரவேற்ற ஷரீஃப் பாய் !
உலக நாடுகள் சுற்றி வந்த அந்த பெரும் வியாபாரி, ஹைதராபாத்தில் நட்சத்திர ஹோட்டல் வைத்திருக்கும் அந்த பெருமுதலாளி ஒவ்வொரு நாளும் என்னை வழியனுப்பும் போது தன் கைப்படத் தயாரித்துத் தந்த அந்த காலைத் தேநீர் !
எப்படி உங்களால் இவ்வளவு எளிமையாக வாழ முடிகிறது ஷரீஃப் பாய் என்றால் ஆகாகான் ஃபோட்டோவைக் காட்டுகிறார்.
மூன்று பெட் ரூம்கள் கொண்டதான சுமார் நானூறு லக்ஸுரி ஃப்ளாட்கள் அடங்கிய அந்த கேட்டட் குடியிருப்பு மொத்தமும் “ஆகாகான்” அவர்களின் வழிபற்றியவர்கள் மட்டுமே வாழும் இடமாம்.
யார் அந்த ஆகாகான் !?
இறைத் தூதரான முகமது நபியை நாம் அறிவோம் !
அவரது மருமகனாரது திருப்பெயர் பெயர் அலி ! அவரைப் பற்றித் தொடரும் இஸ்லாமியர்களைத்தான் “ஷியா” முஸ்லீம்கள் என்கிறார்கள் ! ஷியா எனும் அரபிச் சொல்லுக்குப் பொருள் ‘அலியை பின்பற்றுவோர்’ என்பதாகுமாம்.
அந்த ஷியா வம்சத்தவரின் 49 ஆவது இமாமாக இன்று அவர்களை வழி நடத்திக் கொண்டிருப்பவர்தான் ஆகாகான்.
அவரை சார்ந்த நாங்கள் எங்கள் ஆண்டு வருமானத்தில் 20 சதவிகிதத்தை “கும்த்” என்னும் முறையில் ஏழை எளியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்னும் கோட்பாடோடு வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறார் ஷரீஃப் பாய்.
உலகப் பணக்காரர்களின் முதல் பத்து இடத்தில் ஆகாகான் இருக்கிறார் என்றும், எளியோர்களுக்கு அதிகப்படியான நிதிகளை அளிப்பதில் முதன்மையானவர் அவரே என்றும், அவர்களுக்கான தொழுகை ஸ்தலம் ஜமாத்கனா என்றும், எங்களது தொழுகை வேறு விதமானது என்றும் சொல்லிக் கொண்டே போனார்.
பெண்கள் அங்கே சுதந்திரமாக – அதே சமயம் ஒழுக்கப்பாட்டோடு உலவிக் கொண்டிருப்பதை என்னால் கவனிக்க முடிந்தது. ஜமாத்கானாவின் உட்புறத்தை காண விரும்பிய எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஓகே என வெளியில் நின்றபடி ஒரு கும்பிடு போட்டுக் கிளம்பினேன்.
புது இடம் என்பதால் தூக்கம் பிடிக்கவில்லை. உருண்டு புரண்டு காலை 6 மணிக்கு எழுந்து வெளியில் டீ குடிக்கப் போனால் அடுத்த கட்ட அதிர்ச்சி. மொத்த வெஸ்ட் அந்தேரியும் காலியாக கிடந்தது.
ஆம், மும்பைக்கான சுப்ரபாதம் நடுப்பகலில்தான் ஒலிக்கிறது. நண்பகலுக்குப் பின் மெல்ல சூடு பிடித்து பரபர பரபர பரவென ஓடியாடுகின்றது. அதன் பின் அதன் அசுரப் பாய்ச்சல் நகரெங்கும் – நள்ளிரவு கடந்தும் விரிகிறது. ஓயாது உறங்கி ஆஹாவென எழுந்தொடும் கும்பகர்ண வாழ்க்கை போல…
மும்பை நமது தோசையை விரும்பி உண்கிறது. அதை ‘சைட் டிஷ்’ போல பாவித்து சாம்பாரை மட்டும் ஸ்பூனில் அள்ளி அள்ளிக் குடிக்கின்றது.
அதற்கடுத்த அதிர்ச்சி மும்பை ஸ்டூயோக்கள் !
12 மணி போலத்தான் அங்கே ஸ்டூடியோக்களை திறக்கிறார்கள். சென்னைக் கலைஞனான நான், எனது இருபது வயதில் காலை 7 மணிக்கெல்லாம் ஏ.வி.எம் சவுண்ட் அண்ட் லைட் ஸ்டூடியோவில் நுழைந்து பணியாற்றிப் பழக்கப்பட்டவன்.
காலை 7 TO 1 மற்றும் மதியம் 2 TO 9 கால்ஷீட் என ஓயாது வேலை செய்து பழக்கப்பட்ட எனக்கு மும்பையின் சோம்பேறி கால்ஷீட் வெறுப்பேற்றியது. மும்பையின் ஆகப்பெரிய ஆளுமைகளையெல்லாம் வேலு நாச்சியாருக்காக ஒன்று சேர்த்துவிட்ட நிம்மதியில் பொறுத்துக் கொண்டிருந்தேன்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன் மும்பை வாழ் கலைஞர்கள் ஒவ்வொருவரும் குறைந்தது மூன்று அல்லது நான்கு மணி நேரம் பயணித்த பின்பே ஸ்டூடியோ வந்தடைகிறார்கள் என்பதை… மும்பையின் ட்ராஃபிக் அப்படி.
ஆற அமர ஒரு மணிபோல வந்து சேர்ந்தாலும், அதன் பிறகு அந்தக் கலைஞர்கள் இசையின் பால் செலுத்தும் வேட்கையைக் கண்டு அசந்து போனேன்.
“GOOD, BUT ONCE AGAIN PLEASE” என நான் கேட்கும் போதெல்லாம் அதன் சூட்சுமங்களை எடுத்துச் சொல்லச் சொல்லி – அதனை சட்டெனப் புரிந்து கொண்டு “ஹான் சார், கர்தும் சார்…” என்றபடியே ஸ்ருதி சுத்தம் – அட்ஷர சுத்தம் கொண்டு அயராது பாடிக் கொடுத்தார்கள்.
TRACK TRIAL பார்த்தபின்பு VOICE BOOTH ஐ நோக்கிச் செல்வதற்கு முன் இக்பால் தர்பார் என்னும் புகழ்பெற்ற அந்த மூத்த இசையமைப்பாளரின் காலை தொட்டுக் கொள்பவர்கள் – எழுதியவர் யார் எனக் கேட்டு எனது காலையும் தொட்டுச் செல்லும் பாங்கைக் கண்டு ஆச்சர்யமானேன். படைப்பாளிகளுக்கு அவர்கள் செலுத்தும் மரியாதை அது.
VOUCHER களில் கையெழுத்து இடும் தருணம் காதுகள் இரண்டையும் இருகரம் கொண்டு பொத்தியபடி தங்கள் குருநாதர்களின் பெயரை விழிகள் மூடி மெல்ல உச்சரித்தபின்தான் கையெழுத்திட்டார்கள். ஏனிப்படி என்றால், “இதுதான் எங்கள் கலாச்சாராம்” என்றார்கள். தலை வணங்கி நின்றேன்.
கலாச்சாரம் மட்டுமல்ல அனைத்தும் அங்கே மாறுபாடுற்றுத்தான் இருந்தது.
பொதுவாக மும்பை வானமும் அதன் காற்றும் இறுக்கமானதாகவே இருந்தது. தாகம் மேலிட வென்னீராக வாங்கிக் குடித்துக் கொண்டே இருந்தேன்.
எனது ஒரு விரலில் இருந்த தங்க மோதிரம் அப்படியே இருக்க, மற்றொரு விரலில் இருந்த வெள்ளி மோதிரம் மட்டும் மெல்லக் கறுத்து வந்தது. எனது கழுத்தில் இருந்த அந்த கனத்த வெள்ளிச் சங்கிலி நான்கு நாட்களில் அடர்ந்த கருப்பாகி விட்டது.
சென்னையில் வெளுத்து நின்ற எனது வெள்ளிச் சங்கிலி மும்பையில் மட்டும் ஏன் இப்படி கருத்தடித்து விட்டது ? நான் ஏதும் தவறு செய்துவிட்டேனோ ? இயற்கைதான் என்னை தண்டிக்கிறதோ என்றேல்லாம் மறுகத் துவங்கிவிட்டேன்.
உறக்கமற்ற அந்த இரவில் இருக்கவே இருக்கு கூகுள் என நிரடிப் பார்த்த பின்தான் தெரிந்து தெளிந்து கொண்டேன். மும்பையின் காற்றுச் சூழல் HYDROGEN SULFIDE உள்ளடங்கிய காற்று மாசு பாற்பட்டதாம். வெள்ளியோடு HYDROGEN SULFIDE கலந்தால் அது கறுத்து விடுமாம். அடக் கண்றாவியே என உறங்கிப் போனேன்.
இடைவிடாத இசைப் பணிகளுக்கு நடுவே தமிழர்கள் அடர்ந்து வாழும் தாராவிக்கு செல்லும் வாய்ப்பொன்று கிடைத்தது. அங்கே ஓர் ஐயப்ப பூஜை. அதில் பங்கேற்க வரவேண்டும் என பேரன்பு சுமந்த தாராவித் தமிழர் கே.கே.பாண்டியன் இரண்டு நாட்களாக தொடர்ந்து அழைத்தபடியே இருந்தார். அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ். ஓடோடிச் செல்ல விழைந்தேன்.
வெஸ்ட் அந்தேரியிக்கு சற்றுத் தள்ளி இருக்கும் பகுதிக்குப் பெயர் ‘மலாட்’. அந்த மலாடில் நிறைந்து வாழ்பவர் வெங்கிட் எனும் பக்திநாதன். பிரபலமான காங்கிரஸ்காரர். தமிழுணர்வு மிக்கவர். ஆழங்காற்பட்ட கிறிஸ்த்துவர்.
அவர்தான் என்னை தனது காரில் ஏற்றிக் கொண்டு தாராவியில் நிகழ்ந்த ஐயப்பன் பூஜைக்கு அழைத்துச் சென்றார்.
தாராவியின் குறுகிய பாதைகளுக்குள் ஊடாடி நுழைந்து சென்றோம் . பாதையின் இருமருங்கிலும் இடவலமாக வீடுகள். அறிவிப்பின்றி வெளியேறினால் எதிர் தலை முட்டிக் கொள்ளும்படியான அடர்ந்த குடி வரிசைகள்.
அதற்கு நடுவே ஒரு வெளியிடம் கண்டு அதில் பந்தல் போட்டு அந்த ஐயப்ப பூஜை கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள், திருநங்கைகள், சிறுவர்கள் எனப் பெருங்கூட்டம். ஸ்ருதி தப்பினாலும் பொருள் தப்பாத எளிய பாடல்களை அங்கே பாடி ஆடிக் கொண்டிருந்தார்கள். வாளியில் சந்தனம் சுமந்து வந்த ஒருவர் அனைவரின் மார்பிலும் முதுகிலும் கைகளிலும் அள்ளி அள்ளி பூசிக் கொண்டிருந்தார்.
என்னை சன்னதி வாசலில் இழுத்து நிறுத்தி மாலை மரியாதை செய்த தாராவி மக்களின் தலைவரை வணங்கி, “ஐயா, பென்னம் பெரிய மாளிகைக்குள் சின்னஞ்சிறிய மனிதர்களை கண்டதுண்டு ; இங்கே, சின்னஞ்சிறிய குடிலுக்குள் பென்னம் பெரிய மனிதர்களைக் காண்கிறேன், என்னை ஆசீர்வதியுங்கள்…” என சிரம் தாழ்த்தினேன்.
பேரன்போடு வழியனுப்பினார்கள். அவர்களோடு அந்த தாராவி வீதியில் நடக்கும் தருணம் நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. அந்த நள்ளிரவிலும் பட்டப்பகலில் சென்னை ரங்கநாதன் தெருவில் நெரித்துப் புழங்கும் மனிதக் கூட்டத்தை அங்கே காண முடிந்தது.
இப்படியான நெரிசலுக்குள் இருக்கும் இவர்கள், கடந்து போன கொரானா பாதிப்பில் இருந்து எப்படித்தான் தப்பித்தார்கள் என கேட்டேன் ? அது, அந்த கடவுளுக்கே வெளிச்சம் எனச் சொல்லியபடி கரம்பற்றிக் கொண்டார் மலாடு பக்தி நாதன் !
கரடு முரடான பாதைகளுக்குப் பின்தான் காட்சி கிடைக்கும் என்பார்கள். போலவே, வேலுநாச்சியார் குறித்த எனது மும்பை பயணமும் இனிமையாக நிறைந்தது.
இதுகாறும் சொல்லாத அதுகுறித்த மேலதிக தகவல்கள் அனேகம் உள்ளது. அனைத்தும், அன்னைத் தமிழுக்கானது ! ஆம், தமிழுக்கென வாழும் உலகார்ந்த மின்னம்பலத்தாருக்கு நல்ல சேதி உள்ளது !
விரைவில் அதனை விரித்துச் சொல்வேன் உங்களிடம் !
தாய்மடி அல்லாது வேறேது புகலிடம் !?
கட்டுரையாளர் குறிப்பு
வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர்.
300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
எட்டேகால் லட்சணமே! ஸ்ரீராம் சர்மா
முதல்வரைச் சந்திக்கும் வரை போராட்டம் தொடரும்: ஆசிரியர் சங்கம்
Comments are closed.