கள்ளக்குறிச்சி: கலவரத்தை கைவிடுங்கள் – மாணவியின் தாய்!

Published On:

| By christopher

கள்ளக்குறிச்சியில் நடந்து வரும் கலவரத்தை கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். சமூக வலைதளங்களிலும் ஸ்ரீமதி மரணத்திற்கு நீதி கேட்டு justiceforsrimathi என்ற ஹேஸ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர். இந்த கேஷ்டேக் இந்திய அளவில் 2வது நாளாக டிரெண்டாகி வருகிறது.

மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று (ஜூலை 17) மாணவர்கள் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் மீது கல்வீச்சு தாக்குதல், போலீஸ் மற்றும் பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு, பள்ளி சொத்துகள் சூறையாடல் என போராட்டம் கலவரமாக மாறியுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி வன்முறை போராட்டத்தை கைவிட வேண்டும் என்று போராட்டக்காரர்களுக்கு வேண்டுகோள் விடுத்து பேட்டி அளித்துள்ளார். தழுதழுத்த குரலில் பேசிய அவர், ”நான்கு நாட்களாக அமைதியான முறையில் தான் போராடினோம். அது போலீஸுக்கும் தெரியும். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எல்லோரும் ஸ்ரீமதியை தங்களது தங்கையாக, அக்காவாக, மகளாக நினைத்தே போராடுகிறார்கள். இன்று கூட அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும் என்று தான் சென்றார்கள். ஆனால் எப்படி வன்முறையாக மாறியது என தெரியவில்லை. நான் ஒரு சதவீதம் கூட போராட்டம் இப்படி வன்முறையாக மாறும் என்று நினைக்கவில்லை” என்றார்.

மேலும், என் மகள் ஸ்ரீமதிக்கு வன்முறை இல்லாமல் அமைதியான முறையிலே நீதி கிடைக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன். ஸ்ரீமதிக்காக போராடுகிற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. போராடுவது யாராக இருந்தாலும் வன்முறை போராட்டத்தை கைவிடுங்கள்” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share