கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி நிர்வாகிகளுக்கு ஜாமீன் வழங்க விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியமூர் தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த வழக்கினை தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் மாணவி ஸ்ரீமதியை தற்கொலைக்கு தூண்டியதாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், பள்ளி வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, பள்ளி கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்து சேலம் சிறையில் அடைத்து ஒரு நாள் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், தனியார் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் உட்பட ஐந்து பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்கக் கோரி விழுப்புரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தியிடம் நேற்று (ஜூலை 28) மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது, பள்ளி தாளாளர் ரவிக்குமார், பள்ளிச் செயலாளர் சாந்தி உட்பட ஐந்து பேருக்கும் ஜாமீன் வழங்க நீதிபதி மறுப்புத் தெரிவித்தார். இந்த வழக்கானது சி.பி.சி.ஐ.டி க்கு மாற்றப்பட்டுள்ளதால் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டுமென நீதிபதி குறிப்பிட்டார்.
இந்த மனு மீதான விசாரணையானது வரும் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
- க.சீனிவாசன்