கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான ஜிப்மர் ஆய்வறிக்கையை பெற்றோர் தரப்பிடம் ஒப்படைக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
விசாரணை நிலுவையில் உள்ளதால், ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் மாணவியான ஸ்ரீமதி, ஜூலை மாதம் 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
இவரது, உடல் இரண்டு முறை கூறாய்வு செய்யப்பட்ட நிலையில் அதனை ஆய்வுசெய்ய சென்னை உயர்நீதிமன்றம், ஜிப்மர் மருத்துவக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கை விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இரண்டு உடற்கூறாய்வு ஆய்வறிக்கைகள், ஜிப்மர் மருத்துவக் குழு வழங்கிய உடற்கூறாய்வு ஆய்வறிக்கை,
சிபிசிஐடி போலீசார் பதிவு செய்த எஃப்.ஐ.ஆர். நகல் உள்ளிட்டவற்றை வழங்கவேண்டும் என மாணவியின் தாயார் தரப்பில் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி,
நேற்று (ஆகஸ்ட் 24) ‘மாணவியின் உடற்கூறு ஆய்வறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையின் நகல்கள் நாளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 24) மாணவியின் தாயார் தரப்பில் கோரிக்கை வைத்தபடி, முன்னர் நடைபெற்ற இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகளும், சிபிசிஐடி போலீசாரின் எஃப்.ஐ.ஆர் நகலும் விழுப்புரம் நீதிமன்றம் மூலம் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆனால், ஜிப்மர் மருத்துவக் குழுவினர் அளித்த உடற்கூறாய்வு அறிக்கையினை அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதுகுறித்து இன்று (ஆகஸ்ட்) விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதி தரப்பு வழக்கறிஞர் காசி விஸ்வநாதன்,
“மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் ஆய்வு அறிக்கை, சிபிசிஐடி போலீசாரின் எஃப்.ஐ.ஆர் நகல் ஆகியற்றை கேட்டிருந்தோம்.
இதில் மாணவியின் இரண்டு உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் சிபிசிஐடி போலீசாரின் எஃப்.ஐ.ஆர் நகல் ஆகியவற்றை விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
ஆனால், ஜிப்மர் அறிக்கையை தரமுடியாது என்று கூறிவிட்டது. விசாரணை நிலுவையில் உள்ளதால், ஜிப்மர் ஆய்வு அறிக்கையை தர நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அப்படி, ’உங்களுக்கு ஜிப்மர் மருத்துவக் குழுவின் அறிக்கை வேண்டுமானால் நீங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பெற்றுக்கொள்ளவும்’ என்று கூறியுள்ளது” என்றார்.
ஜெ.பிரகாஷ்