எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகத்தைச் சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று (ஜனவரி 23) கைது செய்தனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் போக்கானது தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜனவரி 15,16 ஆகிய தேதிகளில் நாகப்பட்டினம், பாம்பன் பகுதிகளிலிருந்து மீன் பிடிக்க சென்ற 28 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
அவர்களை உடனடியாக விடுதலை செய்ய இலங்கை அரசுக்கு மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைவரும் ஜனவரி 20-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டனர்.
இந்தநிலையில், கச்சத்தீவு, நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு, அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தை சேர்ந்த 34 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளது மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
காலு மேல காலு போடு ராவண குலமே : பாடிய கீர்த்தி… படபடத்த படக்குழு!
நாடாளுமன்ற தேர்தல்: நிர்வாகிகளை சந்திக்கும் திமுக ஒருங்கிணைப்பு குழு!