அடிப்படை உரிமையில் ஒன்றான தனியுரிமையில் திருமணத்துக்கு பின்பான தனியுரிமையும் அடங்கும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருமணத்துக்கு பின்பான தனியுரிமையை மீறி விவகாரத்து கோரிய கணவர், தனது செல்போன் ரெக்கார்டுகளை திரட்டி நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததற்கு எதிராக மதுரை உயர்நீதி மன்ற கிளையில் பெண் ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கடந்த 2003 ஆண்டு, பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் தன்னுடைய மனைவி தகாத உறவில் ஈடுபட்டார், குரூரமாக நடந்துகொள்கிறார் என்று சொல்லி, அப்பெண்ணின் கணவர் பரமக்குடி துணை நீதிமன்றத்தில் விவாகரத்து பெறுவதற்கு மனுத் தாக்கல் செய்தார்.
மேலும், தன் மனைவி மீது தான் சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்காக, அவரது செல்போன் கால் ரெக்கார்டுகளின்(Call Record) விவரங்களையும் பரமக்குடி துணை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
ஆனால் இதை எதிர்த்து அவரது மனைவி, ’தன்னுடைய செல்போன் ரெக்கார்டுகளை இப்படி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தன்னுடைய தனியுரிமையை மீறுவதாகும்’ என்று கடந்த ஆண்டு இதே நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். ஆனால் நீதிமன்றமோ அவரது மனுவை நிராகரித்துவிட்டது.
இந்த நிலையில், அவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் இந்த ஆண்டு அவரது வழக்கு தொடர்பாக சிவில் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், “பி.எஸ்.ஏ. 2023 சட்டத்தின் படி ஒருவர் கால் ரெக்கார்ட் போன்ற டிஜிட்டல் சாட்சியங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கிறார் என்றால், அந்த சாட்சியின் உண்மைத்தன்மையை நிரூபிக்கும் விதமாக மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு கணினி நிபுணரின் (EEE) சான்றிதழும் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆனால் இந்த வழக்கில் அப்படி ஒரு சான்றிதழ் சமர்ப்பிக்கப்படவில்லை. மேலும் மனு அளித்துள்ள பெண்ணின் கணவர் முறைகேடாக அவரது மனைவியின் செல்போன் கால் ரெக்கார்டுகளை எடுத்துள்ளார். இது தனியுரிமையை மீறுவதாகும்.
மேலும் தமிழ்நாட்டில் மின்னனு ஆதாரங்களை சரிபார்க்கும் நிபுணர் யாரும் நியமிக்கப்படவில்லை என்று மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
அதனால், பரமக்குடி துணை நீதிமன்றம், தனது தனியுரிமை மீறப்பட்டுள்ளது என்று இந்த பெண் தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது செல்லாது” என்று உத்தரவிட்டார்.
இறுதியாக “அடிப்படை உரிமைகளில் ஒன்றான தனியுரிமையில் திருமணத்திற்கு பின்பான தனியுரிமையும் அடங்கும் மற்றும் ஒருவரது தனியுரிமையை மீறி எடுக்கப்பட்ட சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்படமாட்டாது” என்று கூறி அந்த பெண் அளித்த சிவில் சீராய்வு மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஏற்றுக்கொள்ளும் என்று நீதிபதி ஜீ.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
ஏற்கனவே கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் அவருடன் பாலியல் உறவு கொள்வதைத் தண்டிக்கத் தக்க குற்றமாக்க வேண்டும் என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவு கவனம் பெற்றுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ரூ.105 கோடியுடன் காத்திருக்கும் பஞ்சாப் அணி… எந்த எந்த அணி எவ்வளவு செலவழிக்கலாம்?
“மாவீரர்களின் தியாகத்தைப் போற்றும் நாள் நவம்பர் 1”: ஸ்டாலின்
உத்தரப்பிரதேசத்தில் பத்திரிகையாளர் கொலை!