விளையாட்டு வீரர்கள் வீராங்கனைகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் தகுதி, முறை குறித்து தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் “தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகைத் திட்டம் பின்வரும் மூன்று வகைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்)
- பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம்
- வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம்
ஊக்கத்தொகை பெறுவதற்கான தகுதிகள்
பொதுவான தகுதி: மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீராங்கனைகளுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ் நாட்டின் சார்பில் பங்கெடுத்து பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை (ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் மட்டும்) (அதிகபட்சம் 5 நபர்கள் வரை)
- கடந்த 2-ஆண்டுகளில் ஒரு முறையாவது உலக தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். அல்லது கடந்த 2 ஆண்டுக் காலங்களில் ஒலிம்பிக் அல்லது உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் (நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுபவை) பங்கு பெற்றிருக்க வேண்டும்.
- ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டிகள் அல்லது ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கடந்த இரண்டு ஆண்டுக் காலங்களில் முதல் 8 இடங்களில் இடம் பெற்றிருக்க வேண்டும்.
- ஒலிம்பிக்கில் தனிநபர், இரட்டையர் பிரிவு போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
- கடந்த 4 ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்றிருக்க வேண்டும்.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம் (5 மாற்றுத்திறனாளிகள் உட்பட 50 நபர்களுக்கு)
- அரசு அல்லது அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கங்களால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
- ஒலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த் போட்டியில் தனிநபர் விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்றிருக்க வேண்டும்.
- 1.12.2022 அன்று 23 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டம் (10 மாற்றுத்திறனாளிகள் உட்பட 100 நபர்களுக்கு)
- அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ள விளையாட்டு அமைப்புகளால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கம் வென்றிருக்க வேண்டும்.
- 1.12.2022 அன்று 2௦ வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
தேர்வு முறை
பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான விண்ணப்பங்கள் இதற்கென அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு மூலம் ஆய்வு செய்யப்படும். அதனடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இறுதியாகத் தேர்ந்தெடுக்கும் விண்ணப்பதாரர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படுவர்.
அதிகபட்சம் அவர்களுக்கு விதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.
இத்திட்டங்களில் தேர்ந்தெடுக்கப்படும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் காப்பாளர் தங்கள் முழுமையான விவரங்கள் மற்றும் 2 ஆண்டுக்கால இலக்குகள் குறித்த விவரங்களுடன் உடன் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும்.
பன்னாட்டு அளவிலான போட்டிகளில் தொடர்ந்து பதக்கங்கள் வெல்பவர்களுக்குக் கூடுதல் கால நீட்டிப்பு வழங்கப்படும். ஆனால் அதனை உரிமையாகக் கோர இயலாது.
இத்திட்டங்களில் உதவித்தொகை பெறுவோர், தாம் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளிலும், போட்டி விதிமுறைகளுக்கும் உட்பட்டு தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை தங்கள் ஸ்பான்சராக வெளிப்படுத்தும் வகையில் சீருடை அணிய வேண்டும்.
வழங்கப்படும் உதவித்தொகை
தேர்ந்தெடுக்கப்படும் வீரர் வீராங்கனைகளுக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை அவர்கள் விளையாட்டு பயிற்சிகளுக்கான செலவினங்களைத் திரும்ப வழங்கிடும் வகையில் உதவித்தொகை வழங்கப்படும்.
திட்டத்தில் பயன்பெறும் வீரர்கள், வீராங்கனைகள் ஒவ்வொரு மாதமும் தங்கள் பயிற்சி விவரங்கள், போட்டிகளில் பங்கேற்ற விவரங்கள், காயம் மற்றும் சிகிச்சை விவரங்கள் உள்ளிட்டவற்றைத் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளத்தில் அவர்களுக்கென வழங்கப்பட்டுள்ள பிரத்தியேக பக்கத்தில் பதிவேற்ற வேண்டும்.
உதவித்தொகை காலத்தில் மூன்று மாதங்கள் வரை (தொடர்ந்து/ தனித்தனியாக) விவரங்களை இணைய வழியில் பதிவேற்றாதவர்கள், ஆறு மாதங்கள் வரை எவ்வித போட்டிகளிலும் பங்கேற்காதவர்கள், ஓர் ஆண்டு வரை தேசிய அளவிலான போட்டி அல்லது அதற்கு மேலான போட்டிகளில் முதல் 8 இடங்களுக்குள் பெற இயலாதவர்கள், இரண்டு ஆண்டுகள் வரை எவ்வித சர்வதேச பதக்கமும் பெறாதவர்கள் ஆகியோருக்கு உதவித்தொகை நிறுத்தப்படும்.
ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ள விளையாட்டு வீரர்களுக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சமும் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சமும் வெற்றியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தில் அதிகபட்சமாக ரூ.2 லட்சமும் உதவித் தொகை வழங்கப்படும்.
உதவித் தொகை வழங்கப்படும் நோக்கம்
- விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சிறப்புச் சீருடைகள்
- சிறப்புப் பயிற்சிகளுக்கான செலவினம்
- விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயண செலவினம் (விளையாட்டு வீரர்/வீராங்கனை மற்றும் உபகரணங்களுக்கு மட்டும்)
- வெளிநாட்டுப் போட்டிகளில் பங்கேற்பது மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிக்குச் செல்லும் போது போக்குவரத்து, உணவு மற்றும் தங்குமிட செலவினம் (ஒரு நாளைக்கு $130 க்கு மிகாமல்)
- விளையாட்டு தொடர்பான மருத்துவம் / மருத்துவ அறிவியல்/ சரிவிகித உணவு ஆகியவற்றுக்கான ஆலோசனைக் கட்டணம் மட்டும்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு அரங்கங்கள்/ மைதானங்களை தமது விளையாட்டில் பயிற்சி செய்ய எவ்வித கட்டணமும் இன்றி பயன்படுத்திக்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை
இத்திட்டங்களில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் sdat@tn.gov.in மூலம் தங்களது விண்ணப்பங்களை 30.11.2022 முதல் 15.12.2022 மாலை 5 மணி வரை சமர்ப்பிக்கலாம்.
ஏற்கனவே அஞ்சல் வழியில் / நேரடியாக விண்ணப்பித்திருந்தாலும், மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இணைய வழியில் வரும் விண்ணப்பங்களைத் தவிரப் பிற விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்கப்படமாட்டாது.
மேலும் விவரங்களுக்கு ஆடுகளம் தகவல் மையத்தினை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம்”. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோனிஷா
”இந்தியாவின் ஒரு மாநிலமாக இலங்கை மாறும்!” : இலங்கை எம்.பி
ஆளுநர் ஆர்.என். ரவியை பதவி நீக்கக்கோரி வழக்கு!