கிக்சன் கீர்த்தனா : கார மஃபின்ஸ்!

Published On:

| By Minnambalam Desk

Spicy Muffins recipe in Tamil

அனைவராலும் தவிர்க்க முடியாத ஒன்று, நொறுக்குத் தீனி. வயது வித்தியாசமின்றி, எல்லோருமே ஏதேனும் ஒரு விதத்தில் சாப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். சாப்பாட்டை ஒரு நாளைக்கு மூன்று முறை சாப்பிடுகிறோம் என்றால், இந்த ஸ்நாக்ஸ் வகைகளை இரண்டு முறையாவது சாப்பிடுகிறோம். அதற்காக பாக்கெட்டில் அடைக்கப்பட்டவைகளை வாங்குகிறோம். அதைத் தவிர்த்து வீட்டிலேயே நொறுக்குத் தீனிகளைத் தயார் செய்யலாமே… அதற்கு இந்த கார மஃபின்ஸ் ரெசிப்பி உதவும். இந்த மஃபின்ஸ் டீ டைம் ஸ்நாக்ஸாகச் சாப்பிட ஏற்றது. Spicy Muffins recipe in Tamil

என்ன தேவை?

உருளைக்கிழங்கு – 4 (வேகவைத்து, தோல் நீக்கி, மசிக்கவும்)

கெட்டித் தயிர் – 3 டேபிள்ஸ்பூன் (துணியில் கட்டித் தொங்கவிட்டு நீரை வடிக்கவும்)

பால் – அரை கப்

பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – தலா ஒரு டீஸ்பூன்

மைதா மாவு – முக்கால் கப்

துருவிய சீஸ் – 3 டேபிள்ஸ்பூன்

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு டீஸ்பூன்

மிளகு (கொரகொரப்பாக பொடித்தது) – அரை டீஸ்பூன்

எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

எப்படிச் செய்வது?

மைதாவைச் சலித்து, உப்பு, எண்ணெய் சேர்த்து ரவை மாதிரி கலக்க வேண்டும் (இது பிரெட் தூள் போல் இருக்க வேண்டும்). மீதம் உள்ள எல்லாவற்றையும் இதனுடன் சேர்த்து, கெட்டியாகக் கலக்கவும் (உப்புமா பதம் மாதிரி இருக்கும்). இந்தக் கலவையை மப்ஃபின்ஸ் (Muffins) கப்களில் அல்லது `பேக்’ செய்யும் சிறு சிறு கப்களில் ஊற்றி சூடான `அவனில்’ (180 டிகிரி செல்ஷியஸில், 25 நிமிடங்களுக்கு அல்லது வேகும் வரை)பேக் செய்யவும்.

குறிப்பு: விருப்பமான சீஸ் சேர்க்கலாம். சீஸில் உப்பு இருப்பதால், உப்பைப் பார்த்து சேர்க்கவும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share