கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைவர் பவானீஸ்வரியும், பல்நோக்கு குழுவின் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரனும் கிருஷ்ணகிரியில் பத்திரிக்கையாளர்களை இன்று(ஆகஸ்ட் 22) சந்தித்தனர்.
கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் போலியான என்.சி.சி முகாம் இந்த மாதம் தொடக்கத்தில் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாமின் ஒருங்கிணைப்பாளரான சிவராமன் என்பவர் முகாமில் கலந்துகொண்ட சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மக்களிடம் பெரும் சலசலப்பை உருவாக்கிய இந்த விவகாரத்தை முழுமையாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க முதல்வர் ஸ்டாலின் நேற்று சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றும், பல்நோக்குக் குழு ஒன்றும் அமைக்க நேற்று உத்தரவிட்டிருந்தார்.
அதனைத் தொடர்ந்து, குழுவின் அனைத்து உறுப்பினர்களும் கிருஷ்ணகிரிக்கு நேற்று இரவே வந்தனர். இதைத் தொடர்ந்து இன்று பல்நோக்கு குழுவின் தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரனும், புலனாய்வுக் குழுவின் தலைவர் காவல்துறை அதிகாரி பவானீஸ்வரியும் பத்திரிக்கையாளர்களை இன்று சந்தித்தனர்.
அதில் பேசிய காவல் துறை அதிகாரி பவானீஸ்வரி “இந்த சம்பவம் குறித்தும், இது போல மற்ற சம்பவங்கள் நடந்திருந்தால் அதையும் கண்டுபிடித்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து, விரைவாகக் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வோம்” என்றார்.
கிருஷ்ணகிரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளைகள் புகார் அளிக்கத் தைரியமாக முன்வரவில்லை, என்ன நடந்தது என்று முழுமையாகக் கண்டறிய இந்த குழு எந்த மாதிரி நடவடிக்கைகள் எடுக்கும் என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு பல்நோக்கு குழு தலைவர் ஜெயஸ்ரீ முரளிதரன் “பாதிக்கப்பட்ட குழந்தைகள், அவர்களது பெற்றோர்கள், சம்பவம் நடந்த பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஏற்கனவே ஒரு முறை உளவியல் ஆலோசனை வழங்கியிருக்கிறோம். மேலும் ஆலோசனைகள் வழங்குவோம் “ என்றார்.
மேலும் “நான்கைந்து பள்ளிகளில் இது போலப் போலியாக முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விசாரணைக்குப் பின்பு தான் முழுமையாகச் சொல்ல முடியும்” என்று ஜெயஸ்ரீ தெரிவித்தார்.
முக்கிய குற்றவாளி சிவராமன் ஏன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற கேள்விக்கு, “கைது செய்வதற்கு முன்பு சிவராமன் எலி மருந்து விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதனால் தான் மருத்துவர்களின் ஆலோசனையின் படி அவரை காப்பாற்றுவதற்குச் சேலம் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம்” என்றார்.
இதுபோன்ற சம்பவங்கள் வருங்காலத்தில் நடந்தால் மக்கள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்விக்கு “நானும் ஒரு தாய் தான். எனக்கு இந்த வலி புரிகிறது. மக்கள் இந்த மாதிரி சம்பவங்கள் நடந்தால் தைரியமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும். அதற்காகத்தான் 1098 என்கிற உதவி எண் உள்ளது. அதற்கு ஃபோன் செய்து புகார் அளியுங்கள். குடும்பத்திற்குக் கெட்ட பெயர் வந்துவிடும் என்று பயப்படவேண்டாம். குற்றம் செய்தவர் தான் பயப்படவேண்டும்” என்று பவானீஸ்வரி பதிலளித்தார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கிருஷ்ணகிரி சிறுமி வன்கொடுமை: 15 நாளில் விசாரித்து முடிக்க ஸ்டாலின் உத்தரவு!
கிருஷ்ணகிரி மாணவி விவகாரம்: டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!
அமைச்சரவை மாற்றமா? எனக்கு தகவல் வரலை – சிரித்த முதல்வர் ஸ்டாலின்