கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை துரிதமாக விசாரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பு புலனாய்வு குழ அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திக்குப்பத்தில் தனியார் பள்ளியில் போலியாக நடத்தப்பட்ட என்.சி.சி முகாமில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த வழக்கு சம்பந்தமாக 11 நபர்கள் கைது செய்யபட்டிருக்கிறார்கள்.
இன்று (ஆகஸ்ட் 21) காலை தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. மேலும், தமிழக அரசு மற்றும் காவல் துறையை மூன்று நாட்களுக்குள் முழு அறிக்கையை தங்களுக்கு சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் இந்த வழக்கு தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 21) ஆலோசனை நடத்தினார். தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து முடிக்க உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் “கிருஷ்ணகிரி சம்பவம் தொடர்பாக, பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட போலியான NCC பயிற்றுநர்கள் ஆறு பேரில், ஐந்து பேரும், இந்த சம்பவத்தைக் காவல்துறைக்குத் தெரிவிக்காமல் மறைத்த பள்ளியின் நிர்வாகத்தினர் நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டு. நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
வழக்கின் முக்கிய எதிரி சிவராமனுக்கு அடைக்கலம் கொடுத்து, போலீஸாரின் கைது நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்ட இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேற்கூறிய போலியான NCC பயிற்றுநர்கள் இதே போன்று, மேலும் சில பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், இத்தகைய பயிற்சி வகுப்புகளை மேற்கொண்டதாகத் தெரிய வந்துள்ளது.
இந்தப் பள்ளிகள்,கல்லூரிகளிலும் மேற்கூறிய பாலியல் அத்துமீறல்கள் நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவங்களைப் பற்றி முழுமையான விசாரணையை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் பவானீஸ்வரி ஐபிஎஸ் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைக்கவேண்டும்.
இந்த சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களோடு கலந்தாலோசித்து, அவர்களின் நலன் காத்திட தேவையான நடவடிக்கைகள் குறித்தும், இந்த சம்பவம் ஏற்படக் காரணமாக இருந்த சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து, இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் தடுப்பது குறித்தும், உரிய பரிந்துரைகளை அளித்திட, சமூகநலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஒரு பல்நோக்கு குழு (Multi Disciplinary Team MDT) அமைத்திட வேண்டும்.
இக்குழுவில், மாநில சமூக பாதுகாப்பு ஆணையர் ஜானி டாம் வர்கீஸ், பள்ளிக்கல்வி இயக்குநர் லதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்த், மனநல மருத்துவர்கள் பூர்ண சந்திரிகா மற்றும் சத்யா ராஜ், காவல்துறை ஆய்வாளர் லதா, குழந்தைகள் பாதுகாப்பு ஆர்வலர் வித்யா ரெட்டி உறுப்பினர்களாக இருப்பார்கள்.
மேற்கூறிய சம்பவம் குறித்த விசாரணையை துரிதமாக மேற்கொண்டு, 15 நாட்களுக்குள் அனைத்து நடவடிக்கைகளையும் முடித்து, 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி, கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும்” என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
ஆவின் பெண் ஊழியர் பலி : எடப்பாடி கண்டனம்!
கிருஷ்ணகிரி மாணவி விவகாரம்: டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு!