போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ.2000 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் மூளையாக செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து அவர் திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கை என்சிபி அதிகாரிகள் கடந்த மார்ச் 9-ஆம் தேதி கைது செய்தனர். தற்போது அவர் டெல்லி திஹார் சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். போதைப்பொருள் வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறை கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாபர் சாதிக்கை கைது செய்தனர்.
இந்தநிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது ஜாபர் சாதிக்கிற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி சுதிர் குமார் சிரோஹி உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதி அளித்த உத்தரவில், “ரூ.1 லட்சத்திற்கான சொந்த ஜாமீன் தொகையை அளிக்க வேண்டும். வழக்கின் விசாரணை முடியும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் திங்கட்கிழமை டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்.
செல்போன் எண்ணை விசாரணை அதிகாரிக்கு வழங்கி, எப்போதும் இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டும். பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். முகவரி மாறினால் அதுதொடர்பான தகவல்களை விசாரணை அதிகாரிக்கு வழங்க வேண்டும்” என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் ஜாபர் சாதிக் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டுள்ளதால் அவர் சிறையில் இருந்து வெளியே வரமுடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
IND vs SL: ஹர்திக் vs கே.எல்.ராகுல்… இந்திய அணியின் கேப்டன் யார்?