கொலை, கொள்ளை, துப்பாக்கிச் சூடு, வெடிபொருள் போன்ற குற்ற வழக்குகளை விசாரிக்க தமிழகம் முழுவதும் அந்தந்த காவல் நிலையங்களில் தனி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
திருச்சி அரியமங்கலம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், சங்கர் ஆகியோர் ஒரு கொலை வழக்கில் 06.11.2017 அன்று திருச்சி 3 வது கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி வழங்கிய தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல் முறையீட்டு மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் நிஷாபானு, ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை ஏற்கனவே விசாரணை செய்த நீதிபதிகள், “கொலை குற்றங்களை சட்டம் ஒழுங்கு போலீசாரே விசாரிப்பதால், வேலை பளுவால் விசாரணையை தொய்வின்றி, தீவிரமாக இயலவில்லை.
எனவே, கொலை, குற்றங்களை விசாரிப்பதற்கு காவல் துறையில் புதிதாக தனி பிரிவை உருவாக்க வேண்டும். இது குறித்து தமிழக காவல்துறை தலைவர் (DGP) விரிவான பதில் அளிக்க வேண்டும்” என உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.
இந்த வழக்கு மீண்டும் இன்று(நவம்பர் 7) நீதிபதிகள் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது அரசு தரப்பில் அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, “நீதிமன்ற உத்தரவுப்படி கொலை, கொள்ளை, மர்ம சாவு, கடத்தல் வழக்கு , பெரிய விபத்துக்கள் சாதி மதம் சம்பந்தமான வழக்குகள் மற்றும் கொடூர குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு காவல் துறையினருக்கு சிறப்பு பயிற்சி நடத்தப்பட உள்ளது.
மேலும் காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், சேலம், மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்டத்தின் தலைநகரங்களில் தனியாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்கள் மேலே கூறப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்வார்கள். இந்த குழுவில் 2 காவல்துறை ஆய்வாளர் மற்றும் 10 காவலர்கள் இருக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கோயம்புத்தூரில் அனைத்து காவல் நிலையங்களிலும் விசாரணை பிரிவு மற்றும் விசாரணை புலனாய்வு பிரிவு என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக காவல்துறை தலைவர் வெளியிட்டுள்ளார்” என அறிக்கையாக தாக்கல் செய்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவை விரைந்து செயல்படுத்திய தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறைக்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்று சிறப்பு புலனாய்வு குழு அமைப்பதன் மூலம் குற்ற வழக்குகளில் இருந்து குற்றவாளிகள் தப்பிப்பதை தடுக்க முடியும் என தெரிவித்தனர்.
கலை.ரா