எல்லா பருவத்திலும் உணவுக்குக் கூடுதல் சுவையை தருவது தயிர். கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கும் தற்போதைய சூழ்நிலையில் தயிரில் நிறைந்துள்ள அமினோ அமிலங்கள் சளி, இருமல் மற்றும் நோய்த் தொற்றுகள் வராமல் தடுக்கும். தயிரில் தயாரிக்கப்படும் இந்த ஸ்பெஷல் தயிர் சாதத்தில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதச்சத்துகள் சரிவிகிதத்தில் நிறைந்துள்ளதால் அனைவரும் ஏற்றது. குறிப்பாக குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் சருமப் பாதுகாப்புக்கும் உதவும். எலும்புகளை உறுதியாக்கும்.
என்ன தேவை?
பச்சரிசி – 200 கிராம்
பால் – 200 மில்லி (காய்ச்சி ஆற வைத்தது)
பொடியாக நறுக்கிய வெள்ளரிக்காய், கேரட் – தலா 5 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – ஒரு டீஸ்பூன்
தயிர் – ஒரு கரண்டி
மாதுளை முத்துக்கள் – 5 டீஸ்பூன்
திராட்சை, உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவிட்டுக் களையவும். குக்கரில் அரிசியுடன் பால், மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு குழைய வேக வைக்கவும். ஆறிய பின்பு சாதத்தை நன்கு மசிக்கவும். கெட்டியாக இருந்தால், மேலும் சிறிதளவு பாலும் தண்ணீரும் சேர்த்துக் கலந்து தளர மசிக்கவும்.
இதனுடன் வெள்ளரிக்காய், கேரட், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மாதுளை, திராட்சை, உப்பு, தயிர் ஆகியவற்றை சேர்த்துக் கலக்கவும். குழந்தைகளுக்கு இதை இரவு உணவாகக் கொடுத்தால், நன்றாகத் தூக்கம் வரும்.