கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற வசதியாக வங்கிக் கணக்கு தொடங்க 50 இடங்களில் சிறப்பு முகாம் நடத்த காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்துள்ளது. பொது மக்கள் இந்த முகாம்கள் மூலம் ஆரம்ப தொகை இல்லாமல் சேமிப்புக் கணக்கு தொடங்கி பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
“தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்யும் முகாம்கள் இன்று (ஜூலை 24) தொடங்குகிறது.
இந்தத் திட்டத்தில் பயன்பெற ஒவ்வொரு குடும்பத்திலும் ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்களில் 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்களுக்கு உரிமை தொகை வழங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க, சேமிப்பு கணக்கு தொடங்க முகாம் நடக்கும் நாளில் விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போன்றவற்றை கொண்டு ஆரம்ப தொகை இல்லாமல் வங்கிக் கணக்கு தொடங்க காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி ஏற்பாடு செய்துள்ளது.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அருகாமையில் மக்கள் அதிகம் கூடும் 50 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்