ஆனி மாத பெளர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பஸ்களும் மூன்று ரயில்களும் இயக்கப்படுகின்றன.
ஜூலை மாதத்துக்கான (தமிழ் ஆனி மாதம்) பெளர்ணமி இன்று (ஜூலை 2) இரவு 7.42 மணிக்கு தொடங்கி நாளை (ஜூலை 3) மாலை 5.46 மணிக்கு நிறைவடைகிறது.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு கிரிவலம் செல்ல உகந்த நேரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி வேலூர் மண்டல அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் வேலூரில் இருந்து 40 பஸ்கள், திருப்பத்தூரில் இருந்து 30 பஸ்கள், ஆற்காட்டில் இருந்து 30 பஸ்கள் என்று மொத்தம் 100 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகிறது.
இந்த பஸ்கள் இன்று காலை முதல் இரண்டு நாட்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து சென்னையில் இருந்தும் திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அதேபோல் திருவண்ணாமலை பெளர்ணமி கிரிவலத்துக்கு வேலூர் மற்றும் விழுப்புரத்தில் இருந்து மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து வேலூர் கன்டோன்மெண்ட் ரயில் நிலையம் வரை இயக்கப்படும் மெமு ரயில், பவுர்ணமியையொட்டி திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இருந்து இன்று (ஜூலை 2) இரவு 9.50 மணிக்கு புறப்பட்டு, கனியம்பாடி, கண்ணமங்கலம், ஆரணி சாலை, போளூர், அகரம் சிப்பந்தி, துரிஞ்சாபுரம் வழியாக திருவண்ணாமலையை நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.
பின்னர், திருவண்ணாமலையில் இருந்து மறுநாள் (3ஆம் தேதி) அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டு வேலூரை காலை 5.35 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலில் திருவண்ணாமலையில் இருந்து வேலூர், அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு பயணிக்கலாம்.
அடுத்து மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் பயணிகள் ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து நாளை (ஜூலை 3ஆம் தேதி) காலை 9.15 மணிக்கு புறப்பட்டு வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலையை முற்பகல் 11 மணிக்கு சென்றடையும்.
பின்னர், திருவண்ணாமலையில் இருந்து பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, வந்த வழித்தடம் வழியாக விழுப்புரத்தை பிற்பகல் 2.15 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், பண்ரூட்டி, கடலூர், சிதம்பரம், வைத்தீஸ்வரன்கோயில் வழியாக மயிலாடுதுறைக்கு பயணிக்கலாம்.
அதற்கடுத்து தாம்பரத்தில் இருந்து விழுப்புரம் வரை இயக்கப்படும் மெமு ரயில், திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் இருந்து இன்று (ஜூலை 2) இரவு 9.15 மணிக்கு புறப்படும் மெமு ரயில், வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்தூர், திருக்கோவிலூர், ஆதிச்சநல்லூர், அண்டம்பள்ளம், தண்டரை வழியாக திருவண்ணாமலையை இரவு 10.45 மணிக்கு சென்றடையும்.
பின்னர், திருவண்ணாமலையில் இருந்து நாளை (ஜூலை 3) அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்தை காலை 5 மணிக்கு வந்தடையும். இந்த ரயிலில் திருவண்ணாமலையில் இருந்து விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வரை பயணிக்கலாம்.
ராஜ்
சென்னை : சாலை பணிகள் விரைவில் முடியும் – மு.க.ஸ்டாலின்
சிதம்பரம் கோவில் விவகாரம்: தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற கோரிக்கை!