எஸ்.பி.வேலுமணி மீதான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்தாக,
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. இந்த நிலையில் புகாரில் எந்த ஆதாரமும் இல்லை,
பழிவாங்கும் நோக்கில் போடப்பட்ட வழக்கு. எனவே அதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி மனுத்தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, எஸ்.பி.வேலுமணி தொடர்பான வழக்குகளை தாங்களே விசாரிப்பதாக தெரிவித்தது. இதற்கு தமிழக அரசு சார்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் எஸ்.பி.வேலுமணி வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கக்கூடாது என்று கூறி லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு இன்று (செப்டம்பர் 14) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பி.வி.நாகரத்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபிலும், எஸ்.பி.வேலுமணி சார்பில் முகுல் ரோத்தகியும் ஆஜராகினர்.
முதலில் வாதிட்ட முகுல் ரோத்தகி, “உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது நம்பிக்கை இல்லாமலே தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் வாதிடுவதற்கு கூட எதிர்ப்பு தெரிவிப்பது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்” என்று குற்றம் சாட்டினார்.
அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபில், “எந்த ஒரு தனி நீதிபதி மீதும் நாங்கள் குற்றம் சாட்டவில்லை.
வெவ்வேறு வழக்குகள் வெவ்வேறு அமர்வில் இருந்தபோது எப்படி அதை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றிக்கொள்ள முடியும்? அதற்கு அவ்வளவு அவசரம் காட்ட வேண்டியது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் எஸ்.பி.வேலுமணி தொடர்பான டெண்டர் முறைகேடு வழக்குகளை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.
மேலும் நீதிபதிகள் சில கருத்துக்களையும் தெரிவித்தனர். “வழக்குகளின் தன்மையை பொறுத்தே தலைமை நீதிபதி அதை பட்டியலிடுகிறார். எந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கு உண்டு.
நீதித்துறை மீதும், நீதிபதிகள் மீதும் நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது தவறான பாதையில் கொண்டு செல்லும். இதை சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என்று கூறினர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.
கலை.ரா
மின் கட்டண விவகாரத்தைத் திசை திருப்பவே ரெய்டு : ஜெயக்குமார்