நார்ச்சத்து, மெக்னீஷியம், புரதம், கால்சியம் நிறைந்த சோயா உணவுகள் சமீப காலமாக பிரபலமாகி வருகின்றன. எலும்புகளை உறுதியாக்கும், பற்களை வலுவடையச் செய்யும் இந்த சோயா பலரால் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக அசைவ உணவுகளைத் தவிர்ப்பவர்களுக்கு சோயா மாற்றாக இருக்கிறது. அந்த வகையில் உப்புமாவை வெறுப்பவர்களுக்கு, இந்த சோயா உப்புமா செய்து கொடுக்கலாம். ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
என்ன தேவை?
சோயா சங்க்ஸ் – 25 (பெரியது)
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
கேரட் (துருவிக்கொள்ளவும்) – 2 டேபிள்ஸ்பூன்
பீன்ஸ் – 10
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கடுகு, உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன்
எப்படிச் செய்வது?
சோயா சங்க்ஸை 10 நிமிடம் வெந்நீரில் போட்டு, பின்னர் குளிர்ந்த நீரில் இரண்டு முறை கழுவி, மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்துத் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட், பொடியாக நறுக்கிய பீன்ஸ் மற்றும் கேரட் சேர்த்து வதக்கவும். பிறகு அரைத்து வைத்துள்ள சோயா, மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும். நன்கு வெந்தவுடன் கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
எடை குறைப்பு முயற்சியில் தோற்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?