நம்மில் பெரும்பாலானோர் விரத நாட்களிலும் அசைவ உணவையே விரும்புவார்கள். ஒரு முட்டையாவது செய்யக்கூடாதா என்று கேட்பார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சோயா பொடிமாஸ் செய்து கொடுத்து அசத்துங்கள்.
என்ன தேவை?
சோயா சங்க்ஸ் பெரியது – 20
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – அரை டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சாம்பார் பொடி- 2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – சிறிதளவு
பிரிஞ்சி இலை – ஒன்று
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோயா சங்க்ஸை வெந்நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் இரண்டு முறை கழுவி தண்ணீர் இல்லாமல் பிழிந்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். கடலைப்பருப்பை முக்கால் பதத்துக்கு வேக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் சோம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாடை போக வதக்கவும். இதில் தக்காளி சேர்த்து மிருதுவாகும் வரை வதக்கவும். பின்னர் சோயா சங்க்ஸ், சாம்பார் பொடி, உப்பு, வேக வைத்த கடலைப்பருப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.
வாணலியை ஒரு மூடியால் மூடி வேக விடவும். தண்ணீர் வற்றி பொடிமாஸ் நன்கு வெந்தவுடன் இறக்கி சாதம் மற்றும் சப்பாத்தியுடன் பரிமாறவும்.