தாவர அடிப்படையிலான புரதம் என்று பார்த்தால் வேகவைத்த சோயாவில் 100கிராம் அளவில் 18கிராம் புரதம் இருக்கிறது. நார்ச்சத்தும் இதில் அதிகம் என்பதால், மலச்சிக்கலுக்கும் தீர்வாகிறது. 100கிராம் சோயாவில் 6கிராம் அளவு நார்ச்சத்து இருக்கிறது. கலோரியும் வெகு குறைவு என்பதால் எடைக்குறைப்பு முயற்சியில் இருப்போருக்கும் ஏற்றது. சைவ உணவுக்காரர்களுக்கு புரதச்சத்தைப் பெற இந்த சோயா கோலா உருண்டை சிறந்த உணவாக அமையும்.
என்ன தேவை?
சோயா சங்க்ஸ் – 50கிராம் (25 பீஸ் பெரியது)
தேங்காய்த்துருவல் – 2டேபிள்ஸ்பூன்
சோம்பு – அரை டீஸ்பூன்
பட்டை – சிறிய துண்டு
கசகசா – கால் டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 10
பூண்டு – 2பல்
முந்திரி – 4
இஞ்சி – சிறிதளவு
பொட்டுக்கடலை – 3 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 2
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோயா சங்க்ஸை வெந்நீரில் போட்டு 10 நிமிடம் மூடிவைத்து, பிறகு எடுத்து பிழிந்து வைத்துக்கொள்ளவும். மிக்ஸியில் சோயா சங்க்ஸை போட்டு அரைத்துக் கொள்ளவும் (மாவாக அரைக்க வேண்டாம்).
ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடாக்கி பட்டை, சோம்பு, கசகசா, முந்திரி, பொட்டுக்கடலை, பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் மற்றும் தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வதக்கிக் கொள்ளவும். ஆறியவுடன் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரைத்த சோயா, அரைத்த மசாலா, உப்பு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி உருட்டிய சோயா சேர்த்து உருண்டைகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். உருண்டைகளைப் பொரிக்கும் போது தீயை அதிகமாக வைக்கவும். பின்னர் தீயை மிதமாக்கி பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
குறிப்பு
உருட்டுவதற்கு மாவு, சரியாக வரவில்லையென்றால் சிறிதளவு கார்ன்ஃப்ளார் அல்லது பொட்டுக்கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.