சோர்வாக இருப்பவர்களுக்கான எனர்ஜி உணவு இந்த சோயா உருண்டை மசாலா. சிறந்த சைடிஷான இது, செரிமான சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியைத் தரும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஏற்றது.
என்ன தேவை?
சோயா உருண்டைகள் – ஒரு கப்
பெரிய வெங்காயம் – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – அரை டீஸ்பூன்
தக்காளி – ஒன்று
சோம்பு – கால் டீஸ்பூன்
பட்டை – சிறு துண்டு
மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
சோயா உருண்டைகளை வெந்நீரில் போட்டு 15 நிமிடம் வேக வைக்கவும். சூடு ஆறியதும் நீரை வடிகட்டிக் கையால் பிழிந்து, மீண்டும் நீர் ஊற்றிப் பிழிந்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, தேவையான அளவில் நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடாக்கி சோம்பு, பட்டைத் தாளித்து, நறுக்கிய வெங்காயம், இஞ்சி – பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு தக்காளி, நறுக்கிய சோயா உருண்டைகள் போட்டுக் கிளறவும். மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து நன்கு கிளறி அரை கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் வேகவைக்கவும். தண்ணீர் வற்றியதும், நன்றாகக் கிளறி இறக்கவும்.
கிச்சன் கீர்த்தனா: பீட்ரூட் சூப்