தென் மாவட்ட மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் இன்று (டிசம்பர் 20) மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
கடந்த டிசம்பர் 16,17-ஆம் தேதிகளில் பெய்த கன மழையால், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்தன. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் பொதுமக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், நேற்று (டிசம்பர் 19) டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழகத்திற்கு ரூ.12,659 கோடி நிதி ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தார்.
டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்திற்கு சென்று தென் மாவட்ட மீட்பு பணிகள் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா உள்ளிட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இன்று செல்வதாக இருந்தது. இந்தசூழலில் மத்தியக்குழு இன்று ஆய்வு மேற்கொள்வதால், முதல்வர் ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை நாளை பார்வையிடுகிறார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ: 4 பேரிடம் டெல்லி போலீஸ் விசாரணை!
அரசு பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரண பொருட்கள் அனுப்பலாம்: அமைச்சர் சிவசங்கர்