கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் அருகே பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியை பலாத்காரம் செய்த மந்திரவாதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாகர்கோவில் வடசேரி மேல கலங்குடியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (35). இவர் மாந்திரீக பூஜைகள் செய்து வருகிறார். இவரிடம் பள்ளிவிளையை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது மனைவிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி அழைத்து சென்றார்.
அப்போது மணிகண்டன் தொழிலாளியிடம் உங்களது வீட்டில் சில பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து மணிகண்டன் அடிக்கடி அந்த தொழிலாளி வீட்டிற்கு சென்று வந்தார். அப்போது தொழிலாளியின் 13 வயது மகளுடன் நெருங்கி பழகியுள்ளார்.
சிறுமி அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது பரிகார பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறி சிறுமியை அவர் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.
மேலும் இதனை வெளியே கூறக்கூடாது என மிரட்டி உள்ளார். மாணவியும் வெளியே சொல்லாமல் இருந்து வந்த நிலையில் வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து பெற்றோரிடம் வயிறு வலிப்பதாக கூறி சிறுமி கதறி அழுதுள்ளார்.
உடனே அவர்கள் சிறுமியை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் 4 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர்.
இது தொடர்பாக பெற்றோர் மாணவியிடம் விசாரித்த போது மாந்திரீக பூஜை செய்ய வந்த மணிகண்டன் தன்னை பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மணிகண்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சக்தி–
நண்பகல் நேரத்து மயக்கம் : தமிழர்களுக்கான பெருமிதம்!
விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: லட்சக்கணக்கில் பாதிப்பு!
பொங்கல் பரிசு தொகை: வாங்காதவர்கள் எத்தனை பேர்?