திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார திருவிழா இன்று (அக்டோபர் 30)வெகுவிமரிசையாக நடைபெற்றது.
தமிழ்க் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூரும் ஒன்று. அந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா கடந்த அக்டோபர் 25ம்தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6ஆம் நாளான இன்று (அக்டோபர் 30) நடைபெற்றது.
இதை முன்னிட்டு இன்று அதிகாலை 1மணிக்கு நடைதிறக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின் யாகசாலையில் இருந்த ஜெயந்திநாதருக்கு சிறப்பு தீபாராதனையாகி சுவாமி அம்பாளுடன் வெள்ளிச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாசம் வந்தார்.
அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்திற்கு வந்து, அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மாலை தங்க மயில் வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு புறப்பட்டார்.
சூரசம்ஹாரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வருகை தந்தார். பின்னர் முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
இரண்டாவதாக, சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.
முன்னதாக சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் மேலக்கோயிலான சிவன் கோயிலிலிருந்து புறப்பட்டு உள், வெளி மாடவீதிகள் மற்றும் ரதவீதிகள், சன்னதித்தெரு வழியாக திருக்கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்.
இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். இவ்விழாவையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஜெ.பிரகாஷ்
குஜராத் மோர்பி பாலம்: இடிந்து விழுந்ததில் 32 பேர் உயிரிழப்பு!
நீதிபதியிடம் மம்தா வைத்த முக்கிய கோரிக்கை!