திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 6-ம் நாளான இன்று (நவம்பர் 7) கோலாகலமாக நடைபெற்றது.
முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படைவீடாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் திகழ்கிறது.
இந்த கோவிலில் முருகர் சுப்பிரமணிய சுவாமி உருவத்தில் காட்சியளிக்கிறார். இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமான ஒன்று தான் கந்தசஷ்டி திருவிழாவாகும்.
இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. விழா தொடங்கியது முதல் பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இந்த திருவிழா காலத்தில், அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, ஜெயந்திநாதர் யாகசாலை புறப்பாடு உச்சிகால பூஜை, வள்ளி – தெய்வானை அம்பாள்களுடன் திருவாவடுதுறை ஆதினம் கந்தசஷ்டி மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சிகள் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் சூரசம்ஹார நிகழ்வை ஒட்டி இன்று காலை 1 மணி அளவில் நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.
மேலும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், மதியம் 1 மணிக்குச் சாயரட்சை தீபாராதனையும் நடைபெற்றது. சூரசம்ஹார நிகழ்வைக் காண்பதற்காக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு திருச்செந்தூருக்கு வந்தார். அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, ஆய்வு செய்தார். தொடர்ந்து முருக பக்தர்களுடன் சேர்ந்து சூரசம்ஹாரத்தை கண்டுகளித்தார்.
இதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு ஜெயந்திநாதர் சுவாமி, சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முருகப்பெருமானான சுவாமி ஜெயந்திநாதர் வெண்பட்டு உடுத்தி வெட்டி வேர் மயில் தோகை மாலை அணிந்து சூரனை வதம் செய்வதற்காக கடற்கரைக்கு வருகை தந்தார்.
முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரன் தனது பரிவாரங்களுடன் முருகப்பெருமானிடம் போரிடுவதற்காக அவரை மூன்று முறை சுற்றி வந்தார். முருகப்பெருமான் வேல் கொண்டு தாரகாசூரனை வதம் செய்தார்.
அதன்பிறகு சிங்கமுகாசூரன் முருகப்பெருமானை வலமிருந்து இடமாக மூன்று முறை சுற்றி வந்து போரிடுவதற்காக நின்றான். முருகப்பெருமான் சிங்கமுகாசூரனையும் சம்ஹாரம் செய்தார்.
இறுதியாக சூரபத்மன் தனது படைகளுடன் முருகப்பெருமானுடன் போர்புரிய வந்தான். சூரபத்மனையும் முருகப்பெருமான் வதம் செய்தார். இந்த சூரசம்ஹார நிகழ்வைக் காண லட்க்கணக்காணோர் திருச்செந்தூரில் இன்று குவிந்தனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
கொடநாடு விவகாரம்… எடப்பாடி பழனிசாமிக்கு ரூ.1.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க உத்தரவு!