நெல்லை வண்ணாரப்பேட்டையில் 75 வயது முதியவரை அவரது மகன் அடித்து கொலை செய்த சிசிடிவி காட்சி பதிவு வெளியாகியுள்ளது.
கடந்த ஜூலை 6ஆம் தேதி நெல்லை வண்ணாரப்பேட்டை பேருந்து நிறுத்தத்தில் முதியவர் ஒருவரை 45 வயது மதிக்கத்தக்க நபர் தரதரவென இழுத்து வந்து சாலையோரத்திலிருந்த இரு கார்களுக்கு நடுவே வைத்து கடுமையாகத் தாக்கி அப்படியே விட்டுவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
இதையடுத்து தாக்கப்பட்ட முதியவர் கார்களுக்கு இடையில் பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்ததைக் கண்டு அங்கிருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அந்த முதியவரிடம் சென்று பார்த்தபோது, அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.
முதியோரின் சட்டைப்பையில் அவரது சுய அடையாளங்கள் குறித்த ஆவணங்கள் எதுவும் இல்லாததால், அவர் யார் எனக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.
அப்போது அருகிலிருந்த ஆட்டோ ஓட்டுநர்களிடம் போலீசார் விசாரித்த போது சிறிது நேரத்திற்கு முன்பு, ஒருவர் இந்த முதியவரை அழைத்து வந்ததாகவும், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளனர்.
நெல்லையில் தந்தையை அடித்து கொன்ற மகன் கைது – சிசிடிவி காட்சிகள் வெளியானது #Minnambalam #Thirunelveli #Father #CCTV pic.twitter.com/k9G8li1VSw
— Minnambalam (@Minnambalamnews) July 11, 2023
இந்த கொலை தொடர்பாகப் பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நெல்லை வண்ணாரப்பேட்டை பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில் பொறுத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து, கொலை செய்த நபர் குறித்த தகவலை சேகரித்தனர்.
முதியவர் கிடந்த இடத்தில் ஒரு கடையின் பெயர் கொண்ட கட்டை பை இருந்துள்ளது. அந்த கடையின் பெயரை விசாரித்தபோது, விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தைச் சேர்ந்த கடை என்று தெரியவந்தது. இதையடுத்து ராஜபாளையத்தைச் சேர்ந்த போலீசார் உதவியோடு நெல்லை போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கினர்.
இந்த விசாரணையில் உயிரிழந்த நபர் விருதுநகர் மாவட்டம் தளவாய்புரம் அடுத்த மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து(75) என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கொலை செய்தவர் அவருடைய மகன் கடற்கன்னி என்ற அதிர்ச்சி தகவலும் அவர் கேரளாவில் ஜவுளி வியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் கேரளா சென்று கடற்கன்னியை கைது செய்து அழைத்து வந்தனர்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில்,
“தனது அப்பா நெல்லை அரசு மருத்துவமனைக்கு இதயவியல் சிகிச்சைக்காக ஒரு வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு வார சிகிச்சைக்கு பின் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் செல்லும் போது குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஆத்திரத்தில் அடித்து கொலை செய்ததாக கூறியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்ட கடற்கன்னி பாளையங்கோட்டை மத்தியச் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் தந்தையை கடற்கன்னி அடித்துக் கொன்ற வீடியோ காட்சி வெளியாகிப் பார்ப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சரவணன், நெல்லை
‘இமாச்சல் செல்வதை தவிர்க்கவும்’ : கங்கனா
ED இயக்குநர் பணி நீட்டிப்பு செல்லாது : உச்ச நீதிமன்றம்!