இஸ்ரோவிற்கு தொடர்ச்சியான ஆதரவு தெரிவித்துவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கவே தலைமை செயலகம் வந்ததாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரோ தலைவர் சோம்நாத் தமிழ்நாட்டில் இரண்டு நாள் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ளார். அவர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (அக்டோபர் 16) சந்தித்து பேசினார்.
அப்போது சந்திரயான்-3, ஆதித்யா உள்ளிட்ட திட்டங்களின் வெற்றிக்காக சோம்நாத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து சோம்நாத் பேசுகையில், ”இஸ்ரோவிற்கு தொடர்ச்சியான ஆதரவு தெரிவித்துவரும் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கவே இங்கு வந்தேன்.
சந்திரயான் 3 விண்வெளி திட்டத்தில் பங்காற்றிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழா நடத்தியதற்கும் அவருக்கு நன்றி தெரிவித்தேன். இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலினுக்கு சந்திரயான் மாதிரியை பரிசாக அளித்தேன்.
தொழில் வளர்ச்சியிலும், தொழில்நுட்ப வளர்ச்சியிலும் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இதனால் இங்கு உற்பத்தி துறை வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவத்திற்கு தேவையான பாதுகாப்பு தளவாடங்களும் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தான் இஸ்ரோ விண்வெளிதிட்டத்திற்கான இன்ஜின் தயாரிக்கப்படுகிறது.
இஸ்ரோவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தூத்துக்குடி மாவட்டத்தில் குலசேகரப்பட்டிணத்தில் அமைக்கப்பட்டு வருகிறது.
சுமார் 2500 ஏக்கர் அளவிலான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தமிழ்நாடு அரசால் நிறைவுற்று இஸ்ரோ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் அங்கு தொடர்ந்து பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு இஸ்ரோவுக்கு துணை நிற்கும் என்று முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
மேலும் குலசேகரப்பட்டிணம் ராக்கெட் ஏவுதளத்தை சுற்றி தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.
இதுமட்டுமின்றி பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு முன்னேறி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகள்” என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
பிரக்ஞானந்தாவை நேரில் பாராட்டிய இஸ்ரோ தலைவர்!
தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!