பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது 30 நாட்களில் தீர்வு காணப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். Stalin at program makkaludan mudhalvar
பொதுமக்களுக்கு அரசின் சேவைகள் விரைவாக கிடைக்கவும், மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைந்து தீர்வு காணவும் ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (டிசம்பர் 18) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி கோவை எஸ்.என்.ஆர். கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது. கோவை மாநகராட்சி 27 மற்றும் 28-வது வார்டு பகுதி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, அதற்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினார் முதல்வர்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி துறை, ஆதிதிராவிடர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலன், வீட்டு வசதி, கூட்டுறவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை என 13 அரசு துறைகள் மூலம் மக்களுக்கு பல்வேறு சேவைகள் செய்யப்படுகிறது.
இந்த சேவைகளை பெறுவதில் அடித்தட்டு மக்கள் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்று அரசுக்கு தெரியவந்தது.
இந்த சேவைகளை இணையத்தில் பதிவேற்றம் செய்யுதல், தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் மக்களுக்கு சில சிரமங்கள் இருந்தன.
இந்த சிரமங்களை போக்கி மக்களுக்கு உதவும் வகையில், மக்களுடன் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டது. முதல்வரின் முகவரி துறையால் இது தொடங்கிவைக்கப்படுகிறது.
அரசின் சேவைகளை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்று, எல்லா மக்களுக்கும் சேவைகளை கிடைக்கச் செய்வதுதான் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். அதாவது செயல்முறையை விரைவுப்படுத்தி, தாமதங்கள் குறைக்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், முதியோர் போன்றவர்களின் சிரமங்களை முன்கூட்டியே கண்டறிந்து அதையெல்லாம் தீர்த்து வைப்பதில் இந்த திட்டத்தின் கீழ் தனி கவனம் செலுத்தப்படும்.
எல்லா நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு, கிராம ஊராட்சி அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும். இந்த முகாம்களில் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் எல்லோரும் ஒரே குடையின் கீழ் கூடி மக்களுடைய கோரிக்கையை வாங்கி பதிவு செய்வார்கள்.
முகாம்களில் கொடுக்கப்படும் மனுக்கள் எல்லாம் சம்பந்தப்பட்ட துறைகளால் 30 நாட்களுக்குள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படும்.
இந்த திட்டம் என்னுடைய நேரடி கண்காணிப்பில் இருக்கும். இந்த முகாம்கள் இரண்டு கட்டமாக இருக்கும். முதல் கட்டமாக சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் இருக்கக் கூடிய மாநகராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள், நகர்ப்புறங்கள், கிராமப்புறங்கள் என 745 முகாம்கள் நடத்தப்படும்.
வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணத் தொகை வழங்கும் பணிகள் முடிந்ததும் ஜனவரி 1- 30 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.
இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் ஊரக பகுதிகளில் நடைபெறும். மக்களின் கோரிக்கைகள் முறையான கோரிக்கைகளாக இருந்தால் நிறைவேற்றித்தரப்படும்.
அரசு துறை அலுவலர்கள், மக்கள் அளிக்கும் ஒவ்வொரு மனுவுக்கும் முடிவு காண வேண்டும் என்பதே முக்கியம் என்று நினைக்காமல் விடிவு காண்பதே நோக்கம் என்று செயல்பட வேண்டும்.
கண்ணீரோடும், வாடிய முகத்தோடும் ஆனால் இதயத்தில் நம்பிக்கையோடும் தலைமை செயலகத்தில் பொதுமக்கள் வரிசையாக நின்று மனு கொடுப்பதை இப்போதும் பார்க்க முடிகிறது.
கோட்டையை நோக்கி மக்கள் இப்படி வருவதை மாவட்ட ஆட்சியர்களும், அலுவலர்களும் குறைக்க வேண்டும். வட்ட அளவில் முடிக்க வேண்டியதை வட்ட அளவிலும், மாவட்ட அளவில் முடிக்க வேண்டியதை மாவட்ட அளவிலும் முடித்து வைக்க முயற்சிகளை உடனுக்குடன் மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
தொடரும் கனமழை: தென்மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!
தென் மாவட்டங்களில் அரசு இயந்திரம் குவிப்பு : முதல்வர் ஸ்டாலின்
Stalin at program makkaludan mudhalvar