மதுரை ரயில்வே விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு விற்பதை போல நாட்டையும் விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது என்று பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா இன்று (நவம்பர் 15) தெரிவித்துள்ளார்.
மதுரை ரயில்வே மைதானம் மற்றும் விளையாட்டு மைதானத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கையெழுத்து இயக்கத்தை துவங்கி வைத்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “மதுரை அரசடியில் உள்ள ரயில்வே மைதானம் மற்றும் ரயில்வே காலனியில் உள்ள 40.26 ஏக்கர் நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் ரயில்வே நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மைதானத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மைதானத்தை ரயில்வே நிர்வாகம் தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம்” என்று தெரிவித்திருந்தார்.
மதுரை ரயில்வே மைதானத்தை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு எதிரான கையெழுத்தியக்கத்தில் தமிழறிஞர் சாலமன்பாப்பையா கையெழுத்திட்டார்.
“இரயில்வே சொத்து தனியாருக்கல்ல, மக்களுக்கானது. போகிறபோக்கைப் பார்த்தால் நாட்டையே விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. இதை அனுமதிக்ககூடாது” என்று கூறினார். 1/2 pic.twitter.com/iSuhtOpvQZ
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 15, 2023
இந்தநிலையில் பட்டிமன்ற பேச்சாளரும், தமிழ் அறிஞருமான சாலமன் பாப்பையாவிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து பெறப்பட்டது. அப்போது அவர் பேசியதை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்துள்ளார்.
அதில், “மதுரை ரயில்வே மைதானத்தில் எங்கள் குழந்தைகள் சென்று விளையாடுவார்கள். பல முதியவர்களும் காலை நேரங்களில் நடை பயிற்சி செல்கின்றனர். ரயில்வே மைதானம் மக்களுடைய சொத்து. போகிற போக்கை பார்த்தால் நாட்டை விற்றுவிடுவார்கள் போலிருக்கிறது. என்றைக்கும் போலவே மக்கள் அங்கு சென்று நடைபயிற்சி செய்யவும், விளையாடவும் உள்ள இடமாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விஜயபாஸ்கர் சொத்துக்குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு நாளை ஒத்திவைப்பு!