வேலுமணிக்காக ஆஜரான மத்திய அரசு வழக்கறிஞர்! தமிழக அரசு எதிர்ப்பு!

Published On:

| By Kalai

டெண்டர் முறைகேடு வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, சென்னை, கோவை மாநகராட்சிகளில் அரசின் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு செய்ததாகக் கூறி அறப்போர் இயக்கம், திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 

இதை அடிப்படையாக வைத்து கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முன்னாள் அமைச்சர் எஸ். பி வேலுமணிக்கு சொந்தமான வீடு. அலுவலகங்கள் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. இதனையடுத்து, எஸ். பி.வேலுமணி உள்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து எஸ்.பி.வேலுமணி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று (செப்டம்பர் 5) விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜூ முன்னாள் அமைச்சர் வேலுமணி சார்பாக ஆஜரானார். இதற்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கடும் கண்டனம் தெரிவித்தார்.

“முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர்களிடம் அண்மையில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் தற்போது மத்திய அரசின் அடிஷனல் சொலிசிட்டர் ஜெனரலாக உள்ள மூத்த வழக்கறிஞர், ஊழல் வழக்கில் அவர் சார்பில் ஆஜராகுவது முறையற்றது, எஸ்.பி.வேலுமணி சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி மத்திய அரசுக்கு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கடிதம் எழுதப்படும் என்றும் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

கலை.ரா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel