புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசையுடன் விமான நிலையத்தில் வாக்குவாதம் செய்து பாஜகவுக்கு எதிராக கோஷமிட்ட விவகாரத்தில் மாணவி சோபியா மீதான வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து இன்று (ஆகஸ்ட் 16) உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் சோஃபியா என்ற ஆராய்ச்சிப் படிப்பு மாணவி அப்போது தமிழக பாஜக மாநில தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் முன்பு ’பாசிச பாஜக ஆட்சி ஒழிக’ என முழக்கமிட்டார்.
தொடர்ந்து இருவரும் கீழே இறங்கி வந்து விமான நிலையத்திலும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து விமானத்தில் கோஷமிட்டதற்காக மாணவி சோஃபியா கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
மேலும் சோஃபியா 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறைக்குச் செல்லும் முன் நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில் அவர் உடல்நலமின்றி இருக்கிறார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பின்னர் நிபந்தனையற்ற ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
அதே நேரத்தில், அவர் விமானத்தில் கோஷமிட்டதற்காக தூத்துக்குடி காவல் நிலையத்தில், அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சோஃபியா சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ”இந்த வழக்கில் சென்னை பெருநகர காவல்துறைக்கான சட்டப்பிரிவை தூத்துக்குடி போலீசார் பயன்படுத்தி உள்ளனர்.
இதுபோன்ற சட்டப்பிரிவுகளை சென்னை, கோவை போன்ற காவல்துறையினர் மட்டுமே பயன்படுத்த முடியும். தூத்துக்குடி போலீசார் இந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது” என்றார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி தனபால், சோஃபியா மீது பதியப்பட்ட சட்டப்பிரிவு பொருத்தமானது அல்ல. எனவே இந்த வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.
கிறிஸ்டோபர் ஜெமா